செய்திகள்
கே.எஸ்.அழகிரி

இந்தியாவில் தடுப்பூசி போடாமல் வெளிநாடுகளுக்கு அனுப்புவதா?- கே.எஸ்.அழகிரி கண்டனம்

Published On 2021-04-08 07:32 GMT   |   Update On 2021-04-08 07:32 GMT
இதுவரை 6 கோடி தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பது மிகுந்த வேதனையை தருகிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் உயிரிழப்புகள், உடல் நல சீர்கேடுகள், பொருளாதார பேரழிவுகளை இந்தியா சந்தித்து வந்தன.

கடந்த 18, ஏப்ரல் 2020-ல் கொரோனாவின் எண்ணிக்கை 2013 ஆக தான் இருந்தது. ஆனால் ஓராண்டில் மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சியப்போக்கு காரணமாக 6 ஏப்ரல் 2021-ல் பாதிப்பின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 269 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளனர். உலக நாடுகள் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா இருப்பது மிகுந்த கவலையைத் தருகிறது.

அதே போல, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஒரே நாளில் 4 ஆயிரமாகவும், சென்னையில் 1500 ஆகவும் உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக மக்களிடையே மீண்டும் அச்சமும், பீதியும் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஏப்ரல் 6 நிலவரப்படி 8.7 கோடி பேருக்கு போடப்பட்டிருக்கிறது. இதை வைத்து பார்க்கிற போது 1 லட்சம் பேருக்கு சராசரியாக 6,310 பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.


ஆனால், உலகளவில் தடுப்பூசி போட்டவர்கள் சராசரியாக 1 லட்சம் பேருக்கு 8,900 ஆக இருக்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகிற போது 1 லட்சம் பேருக்கு அமெரிக்காவில் 50,410, பிரிட்டனில் 54,680 ஆகவும் இருக்கிறது. இந்த நிலையில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலமே கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும்.

இதை மத்திய அரசு உணர்ந்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டுமே தவிர, தடுப்பூசியை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதுவரை 6 கோடி தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு மக்கள் விரோத நடவடிக்கையாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News