செய்திகள்
கைது

ஓட்டல் அதிபர் கடத்தல்- புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் குற்றவாளிகள் அதிரடி கைது

Published On 2021-10-11 03:14 GMT   |   Update On 2021-10-11 03:14 GMT
சென்னை திருவல்லிக்கேணியில் ஓட்டல் அதிபரை கடத்திச்சென்ற குற்றவாளிகள், புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
சென்னை:

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் வசிப்பவர் சஜின் (வயது 32). இவர் தனது வீட்டின் கீழ்த்தளத்தில் பாஸ்ட்புட் ஓட்டல் நடத்திவருகிறார். சஜின் கடந்த 8-ந் தேதி ஓட்டலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்குவந்த சிலர், ‘உங்கள் அக்காவின் கணவர் கிறிஸ்துராஜா நடத்தும் சீட்டு கம்பெனியில் நாங்கள் கட்டியுள்ள லட்சக்கணக்கான பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றிவிட்டார். அவரோடு பஞ்சாயத்து பேச வேண்டும்’ என்று கூறி சஜினை ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றனர். சஜினும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் சென்றார்.

புதுப்பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சஜின், அங்குள்ள அறை ஒன்றில் அடைத்துச் சிறை வைக்கப்பட்டார். தான் கடத்தி வரப்பட்டுள்ளோம் என்று சஜினுக்கு அதன் பிறகுதான் தெரிந்தது. சஜினை கடத்தல்காரர்கள் அடித்து சித்ரவதை செய்தார்கள். தங்களுக்கு தரவேண்டிய பணத்துக்காக கிறிஸ்துராஜாவின் வீட்டு பத்திரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவரை தீர்த்துக்கட்டி விடுவோம் என்றும் சஜினை கடத்தல்காரர்கள் எச்சரித்தனர். கடத்தல்காரர்கள் கேட்டபடி, கிறிஸ்துராஜாவின் வீட்டு பத்திரம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், சஜின் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. உதவி கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அறிவுமணி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் துரித விசாரணை நடத்தி, சஜின் சிறை வைக்கப்பட்ட அறையை முற்றுகையிட்டனர். சஜின் பத்திரமாக மீட்கப்பட்டார்.

அவரை அடைத்துவைத்து சித்திரவதை செய்ததாக புதுப்பேட்டை ராஜா உசேன் (53), முகமது ஹக்கீம் (35), மோகன்ராஜ் (35) மற்றும் கொளத்தூர் முகமது சுல்தான் (58) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.
Tags:    

Similar News