செய்திகள்
மனு கொடுக்க வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும்-கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மனு

Published On 2021-08-02 11:20 GMT   |   Update On 2021-08-02 11:20 GMT
மகாத்மா காந்தியின் கனவான கிராம சுயாட்சிக்காக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது.
திருப்பூர்:

கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டுமென திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாநில கொள்கை பரப்பு  செயலாளர் சிவபாலன், மாவட்ட தலைவர் கமல் ஜீவா மற்றும் நிர்வாகிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தியின் கனவான “கிராம சுயாட்சிக்காக” மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்குவதற்காக பல்வேறு களப்பணிகள், கருத்தரங்குகளை முன்னெடுத்துள்ளோம்.

குறிப்பாக கிராம ஊராட்சி அமைப்பின் வேரான “கிராம சபை” விழிப்புணர்விற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்திருக்கிறோம். இந்த அடிப்படையில் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதியன்று தங்களது மாவட்டத்திலுள்ள அனைத்துஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

குறிப்பாக கீழ்க்கண்ட நடைமுறைகளைஅவசியம் செயல்படுத்த வேண்டுகிறோம். 7 நாட்களுக்கு முன்பாக கிராமசபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

கிராம சபையில் முன்வைக்கப்படவேண்டிய கிராம ஊராட்சியின் வரவு-செலவுஅறிக்கை, வங்கிக்கணக்கு புத்தகங்கள், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட முக்கியஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

கிராம நலன்கருதி மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளானது முறையாக தீர்மானங்களாக  பதிவு செய்யப்படுதல் வேண்டும். கிராமசபை முடிவுற்ற பின்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலானது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவேண்டும். தீர்மான நகல் கேட்கும் நபர்களுக்கு தாமதமின்றி நகலானது தரப்பட வேண்டும்.

கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு, குறைந்தபட்சம் பங்கேற்க வேண்டிய கிராம சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கு வேண்டிய விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

கிராமசபை  கூட்டத்தை வீடியோ, புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.கிராம சபை உறுப்பினர்கள், கிராம சபை கூட்ட நிகழ்வுகளை புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு அனுமதி தரப்படவேண்டும்.

கிராம சபை  கூட்டமானது ஊராட்சிக்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும் நடத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக  சுழற்சி முறையில் வெவ்வேறு குக்கிராமங்களில் கூட்டமானது நடத்தப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News