செய்திகள்
குமாரசாமி

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை வேறு கட்சியுடன் இணைப்பது தற்கொலைக்கு சமம்: குமாரசாமி

Published On 2020-12-21 02:00 GMT   |   Update On 2020-12-21 02:00 GMT
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை வேறு கட்சியுடன் இணைப்பது தற்கொலைக்கு சமமானது. அந்த தவறை நாங்கள் செய்ய மாட்டோம் என்று குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சுயமரியாதை கன்னடர்களின் கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியை என்றைக்கும் வேறு கட்சியுடன் இணைக்கும் முடிவை எடுக்க மாட்டோம். மக்களின் குரலை ஒலிக்கும் எங்கள் கட்சி தனித்தே செயல்படும். பிரச்சினைகளின் அடிப்படையிலும், நம்பிக்கை அடிப்படையிலும் பா.ஜனதாவுடன் இணைந்து செயல்படுவோம். பா.ஜனதாவுடன் எங்கள் கட்சி இணைக்கப்படுவதாக வெளியாகும் கற்பனையான செய்திகளுக்கு முக்கியத்துவம் இருக்காது.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சியை காங்கிரசார் பா.ஜனதாவின் இன்னொரு பிரிவு என்று குற்றம்சாட்டினர். தேர்தலுக்கு பிறகு அக்கட்சியினர் எங்களிடம் வந்து கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தனர். எங்கள் கட்சி உண்மையிலேயே பா.ஜனதாவின் இன்னொரு பிரிவாக இருந்திருந்தால், எதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருப்போம்?. நாங்கள் எந்த ரகசிய ஒப்பந்தமும் செய்து கொள்ளமாட்டோம்.

விவசாய கடன் தள்ளுபடி, படவர பந்து போன்ற பல நல்ல திட்டங்களை நான் செயல்படுத்தினேன்.

தேவகவுடாவின் விருப்பத்தின்படி நடைபெறும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை வேறு கட்சியுடன் இணைப்பது தற்கொலைக்கு சமமானது. அந்த தவறை நாங்கள் செய்ய மாட்டோம். எதிர்காலத்திலும் இத்தகைய நிலை எங்கள் கட்சிக்கு வராது.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News