செய்திகள்
கைது

சென்னை மண்ணடியில் ரூ.500-க்கு போலி கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் விற்பனை- வாலிபர் கைது

Published On 2021-10-20 21:01 GMT   |   Update On 2021-10-20 21:01 GMT
சென்னை மண்ணடியில் போலியாக கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் தயாரித்து ரூ.500-க்கு விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூர்:

சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் கொரோனா பரிசோதனை மையம் நடத்தி வருபவர் ஹரிஸ் பர்வேஸ் (வயது 30). இந்த பரிசோதனை மையத்தின் பெயரில் அரைமணி நேரத்தில் ரூ.500-க்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் தரப்படும் என ‘வாட்ஸ்அப்’பில் தகவல் பரவியது.

இதையறிந்த ஹரிஷ் பர்வேஸ், அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் வேண்டும் என கூறினார். இதற்காக ரூ.500-ம் ஆன்லைன் மூலம் அவர்கள் கூறிய வங்கி கணக்கில் செலுத்தினார்.

அதன்படி சிறிதுநேரத்தில் பரிசோதனை எதுவும் செய்யாமல் அவரது கொரோனா பரிசோதனை மையத்தின் பெயரிலேயே அவருக்கு போலியான கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் தயாரித்து ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பி வைத்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹரிஸ் பர்வேஸ், இதுபற்றி வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.



அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன் வழக்குப்பதிவு செய்து, அந்த செல்போன் எண்ணை வைத்து திருவல்லிக்கேணியை சேர்ந்த இன்பர்கான் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் இன்பர்கான், வெளிநாட்டில் இருந்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வரும் குருவியாக செயல்பட்டு வந்துள்ளார். வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் என்பதால், தனது நண்பருடன் சேர்ந்து இதையே தொழிலாக செய்யத்தொடங்கினார்.

அதன்படி கொரோனா பரிசோதனை எதுவும் செய்யாமல் தனியார் பரிசோதனை மையத்தின் பெயரில் போலியாக கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழை தயாரித்து ரூ.500-க்கு விற்று வந்தனர். குறிப்பாக வெளிநாட்டுக்கு செல்லும் குருவிகளுக்கு இதுபோல் போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலியாக கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் தயாரித்து வழங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கைதான இன்பர்கானை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவருடைய நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News