செய்திகள்
கோப்புபடம்

திருமக்கோட்டை அருகே தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-17 06:34 GMT   |   Update On 2020-10-17 06:34 GMT
திருமக்கோட்டை அருகே கண்ணாரபேட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமக்கோட்டை:

திருமக்கோட்டை அருகே கண்ணாரபேட்டை மெயின்ரோட்டில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு பல நாட்களாக நெல் கொள்முதல் செய்யாமல் உள்ளது. கொள்முதல் செய்யும் போது மூட்டைக்கு ரூ.40 கமிஷன் பெற்று 40 கிலோ மூட்டைக்கு 2 கிலோ கூடுதலாக எடுக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக நெல் கொள்முதல் செய்யாமல் இருப்பதால் விவசாயிகள் தங்கள் நெல்களை ஆங்காங்கே சாலையில் கொட்டி இரவு பகலாக காத்து கிடக்கின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்கள் அனைத்தும் வீணாகி வருகிறது. இந்தநிலையில் கண்ணாரப்பேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் மற்றும் 155 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை கண்டித்து திருமக்கோட்டை கண்ணாரபேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தலையாமங்கலம் பாலு, மன்னார்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தன்ராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே லஞ்சம் பெறுவதை நிறுத்து. தாமதமின்றி நெல்லை கொள்முதல் செய் என்று கோஷமிட்டனர். இதுகுறித்து பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில்,

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 234 நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல், வெளிமாநிலம் வெளி மாவட்டத்தில் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதால் முறைகேடு நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 1,500 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் விவசாயிகள் நெல் மணிகள் வீணாகி வருகின்றன. எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை திரட்டி போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.
Tags:    

Similar News