செய்திகள்
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், இந்திய கேப்டன் விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் : இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா?

Published On 2020-12-01 19:17 GMT   |   Update On 2020-12-01 19:17 GMT
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. தொடரை இழந்து விட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கான்பெர்ரா:

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

முதல் இரு ஆட்டங்களை பொறுத்தவரை இந்திய அணி 300 ரன்களை கடந்து பேட்டிங்கில் ஓரளவு நன்றாகத் தான் செயல்பட்டது. ஆனால் பந்து வீச்சு படுமோசமாக அமைந்தது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமியின் பந்து வீச்சு எடுபடவில்லை. சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 2 ஆட்டங்களையும் சேர்த்து 160 ரன்களை வாரி வழங்கியுள்ளார். கான்பெர்ரா மைதானமும் பேட்டிங்குக்கு உகந்தது தான். அதனால் பவுலர்கள் சரியான அளவில் பந்து வீசி நெருக்கடி கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். முகமது ஷமி, பும்ரா, நவ்தீப் சைனி ஆகியோரில் இருவருக்கு ஓய்வு அளித்து விட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் டி.நடராஜன், ஷர்துல் தாகூர் இடம் பெறலாம். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் 71 ‘யார்க்கர்’ பந்துகளை வீசி கவனத்தை ஈர்த்த தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. தொடரை இழந்து விட்டாலும் அடுத்து வரும் தொடரை நம்பிக்கையுடனும், கூடுதல் உத்வேகத்துடனும் எதிர்கொள்வதற்கு இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி காண்பது முக்கியமாகும்.

இன்னும் 23 ரன்கள் எடுத்தால் 12 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க காத்திருக்கும் கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஒருசேர பேட்டிங்கில் ஜொலித்தால், எதிரணிக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் வெற்றியை பெறலாம்.

ஆஸ்திரேலிய அணியில் இரு ஆட்டங்களிலும் ஸ்டீவன் சுமித் 62 பந்துகளில் (105 மற்றும் 104 ரன்) சதம் விளாசினார். கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல் ‘சரவெடி’ பேட்டிங்கை தொடுத்தார். இதனால் தான் அவர்கள் 374 மற்றும் 389 ரன்கள் வீதம் இமாலய ஸ்கோரை எட்ட முடிந்தது. எனவே இவர்களை சீக்கிரம் காலி செய்தால் தான் இந்திய அணியின் கை ஓங்கும். இரு ஆட்டத்திலும் அரைசதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக குறுகிய வடிவிலான போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவு தான். அவருக்கு பதிலாக மேத்யூ வேட், டார்சி ஷார்ட் ஆகியோரில் ஒருவர் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தடுமாற்றம் கண்டுள்ளார். இரு ஆட்டத்தையும் சேர்த்து மொத்தம் 18 ஓவர்களில் 147 ரன்களை வழங்கி வள்ளல் பவுலராக மாறிப்போனார். ஆனால் இது பற்றி கவலைப்படாத ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘ஸ்டார்க்கின் மிகச்சிறந்த பந்து வீச்சு இன்னும் வெளிப்படவில்லை. கடந்த 8-9 ஆண்டுகளாக அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதனால் மற்றவர்களை காட்டிலும் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். தொடக்கத்தில் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்யவே அவர் முயற்சிப்பார். ஆனால் பெரிய ஸ்கோரை விரட்டும் எதிரணிக்கு அதுவும் சிறந்த வீரர்களை கொண்டுள்ள அணிக்கு பந்து வீசும் போது உங்களது பந்து வீச்சை அடித்துவிரட்டத் தான் பார்ப்பார்கள். எனவே சற்று வித்தியாசமாக ஏதாவது செய்ய முடியுமா என்று அவரிடம் பேசுவேன். மற்றபடி அவரது பந்து வீச்சு குறித்து பதற்றமடைய எதுவும் இல்லை’ என்றார்.

அதிகமான ஷாட்பிட்ச் பந்துகளை போட்டுத் தான் ஆஸ்திரேலிய பவுலர்கள் இந்தியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்திய பேட்ஸ்மேன்களும் இந்த வகை பந்தில் ஒரு நேரம் நன்றாக அடித்து விட்டு, இன்னொரு சமயம் சிக்கிக்கொள்கிறார்கள். இன்றைய மோதலிலும் அவர்கள் அதே யுக்தியுடன் தான் வருவார்கள். அந்த சவாலை மகிழ்ச்சியுடன் சந்திக்க தயாராக இருப்பதாகவும், நாங்கள் சரிவில் இருந்து மீண்டு வலுவாக திரும்பும் மனஉறுதியுடன் இருப்பதாகவும் நேற்று நிருபர்களை சந்தித்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.

எது எப்படி என்றாலும் உள்ளூர் சூழல் ஆஸ்திரேலியாவுக்கே சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பேட் செய்ய விரும்பும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா அல்லது டி.நடராஜன், நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், மேத்யூ வேட் அல்லது டார்சி ஷார்ட், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், மோசஸ் ஹென்ரிக்ஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, சீன் அப்போட், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனிடென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

சிட்னி போன்று கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானமும் முழுமையாக பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்கக்கூடியது தான். இங்கு இதுவரை நடந்துள்ள 9 ஆட்டங்களில் முதல் 2 ஆட்டங்களில் 2-வது பேட் செய்த அணியும், கடைசி 7 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அணி இங்கு ஆடியுள்ள 2 ஆட்டங்களிலும் (2008-ம் ஆண்டில் இலங்கை, 2016-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) தோல்வி அடைந்துள்ளது.

11 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2015-ம் ஆண்டு உலககோப்பை தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் (215 ரன்) நொறுக்கியதும் அடங்கும். 2015-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்தது இந்த ஸ்டேடியத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். கடைசி 4 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகள் 345 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளன.
Tags:    

Similar News