செய்திகள்
ஸ்கூட்டரில் வந்த தம்பதி

மும்பையிலிருந்து கறம்பக்குடிக்கு ஸ்கூட்டரில் வந்த தம்பதி

Published On 2020-10-26 05:12 GMT   |   Update On 2020-10-26 05:12 GMT
மகனின் பிறந்தநாளை கொண்டாட மும்பையிலிருந்து கறம்பக்குடிக்கு ஸ்கூட்டரில் தம்பதிகள் வந்தனர்.
கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 41). இவரது மனைவி சங்கீதா (36). இவர்களுக்கு வேணி (13) என்ற மகளும், யோகேஸ்வரன் (6) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தங்கி பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் மும்பையில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டதால், செல்வம் தனது குழந்தைகளை கறம்பக்குடி அருகே பில்லக்குறிச்சியில் உள்ள அவர்களது தாத்தா வீட்டில் விட்டு சென்றார். செல்வமும், அவரது மனைவியும் மும்பையிலேயே இருந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பெற்றோரை பார்க்காமல் குழந்தைகளும், குழந்தைகளை பார்க்க முடியாமல் பெற்றோரும் தவித்து வந்தனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், மும்பையிலிருந்து தமிழ்நாட்டிற்கு, பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் செல்வமும், அவரது மனைவியும் கறம்பக்குடி வந்து அவர்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் செல்வத்தின் மகன் யோகேஸ்வரனுக்கு வருகிற 28-ந் தேதி பிறந்தநாள் வருகிறது. ஆண்டுதோறும் மகனுடன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த பெற்றோர் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், சேர்ந்து கொண்டாட முடியாத நிலை ஏற்படுமோ என வருந்தினர். இருப்பினும் எப்படியாவது கறம்பக்குடி சென்று மகன் பிறந்த நாளை கொண்டாடுவது என முடிவு செய்தனர். விமான கட்டணம் செலுத்த முடியாத நிலையில், அவர்களுக்கு சொந்தமான ஸ்கூட்டரில் கறம்பக்குடிக்கு செல்வது என முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 21-ந் தேதி மும்பையில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டு 23ந்தேதி இரவு கறம்பக்குடி வந்து சேர்ந்தனர். 7 மாதத்திற்கு மேலாக பெற்றோரை பார்க்காத குழந்தைகள் ஆவலுடன் ஓடிவந்து பெற்றோரை கட்டித்தழுவினர். மகனின் பிறந்தநாளை கொண்டாட 1,400 கிலோ மீட்டருக்கு மேல் ஸ்கூட்டரில் பயணம் செய்து கறம்பக்குடி வந்த தம்பதியை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டு தெரிவித்தனர்.
Tags:    

Similar News