செய்திகள்
இயற்கை எழில் கொஞ்சும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் தோற்றம்

ஆனைமடுவு அணையில் இருந்து 110 கன அடி தண்ணீர் திறப்பு

Published On 2021-11-25 04:32 GMT   |   Update On 2021-11-25 04:32 GMT
16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைமடுவு அணை நிரம்பியதோடு, அணையிலிருந்து வசிஷ்டநதியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்டநதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சி.என். பாளையம், சி.பி.வலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன.

கடந்த 2005 டிசம்பர் 26-ந்தேதி ஆனைமடுவு அணை நிரம்பியது. அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக அணை நிரம்பவில்லை. இந்த நிலையில், கடந்த 2 மாதமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 65.45 அடியாக உயர்ந்தது. அணையில் 248.51 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி பிரதான மதகு வழியாக உபரிநீராக வினாடிக்கு 110 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைமடுவு அணை நிரம்பியதோடு, அணையிலிருந்து வசிஷ்டநதியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆனைமடுவு அணை பாசன விவசாயிகள் மட்டுமின்றி, வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News