செய்திகள்
மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன்

கொரோனா தடுப்பு நடவடிக்கை- 11 மாநில மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய ஹர்ஷ் வர்தன்

Published On 2021-04-17 09:58 GMT   |   Update On 2021-04-17 09:58 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடப்படும் நிலவரம், தடுப்பூசி கையிருப்பு போன்றவை குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

இந்தியாவில் மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது. சர்வதேச அளவில் கொரோனா பாதிக்கும் 4 பேரில் ஒருவர் இந்தியர் என்ற நிலை உருவாகி இருக்கிறது.  5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பொது மக்களிடம் நிலவும் அலட்சியம் போன்றவை காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடனும், கவர்னர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து, பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்களின் சுகாதாரத்துறை மந்திரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் இன்று ஆலோசனை நடத்தினார். நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடப்படும் நிலவரம், தடுப்பூசி கையிருப்பு போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது பேசிய ஹர்ஷ் வர்தன், ‘கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருகிறோம். தற்போது வரை, 12 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க பணியாற்றி வருகிறோம்’ என்றார்.
Tags:    

Similar News