தொழில்நுட்பம்
ஐமேக்

அடுத்த ஆண்டு முதல் மேக் சாதனங்களில் சொந்த சிப் வழங்க ஆப்பிள் முடிவு

Published On 2020-04-24 08:32 GMT   |   Update On 2020-04-24 08:32 GMT
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தனது மேக் சாதனங்களில் சொந்தமாக சிப் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஆப்பிள் நிறுவனம் தனது மேக் கம்ப்யூட்டர்களில் சொந்த பிராசஸர்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் ஆப்பிள் தனது சொந்த சிப்செட்களை வழங்கி வருகிறது. 

புதிய ஐபோன் மாடலில் வழங்கப்பட இருக்கும் ஏ14 பிராசஸரை தழுவி புதிய மேக் பிராசஸர்களை உருவாக்கும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேக் சாதனங்களில் இன்டெல் பிராசஸர்களுக்கு மாற்றாக சொந்த பிராசஸர்களை படிப்படியாக வழங்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் தனது மேக் கம்ப்யூட்டர்களில் இன்டெல் பிராசஸர்களை வழங்கி வருகிறது. அன்று முதல் இன்டெல் நிறுவனம் ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு சிப்செட்களை உருவாக்கி வழங்கி வருகிறது. தனது சாதனங்களில் பயன்படுத்துவதற்கான மோடெம் சிப்செட்களை ஆப்பிள் மற்ற நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் வழக்கத்தை கொண்டுள்ளது.



எனினும், சொந்தமாக சிப்செட்களை உருவாக்கும் முயற்சியாக ஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் மோடெம் பிரிவை இந்திய மதிப்பில் ரூ. 7600 கோடிகளை கொடுத்து வாங்கியது. இதைத் தொடர்ந்து குவால்காம் நிறுவனத்துடன் நீண்ட காலமாக இருந்து வந்த காப்புரிமை சார்ந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து கொண்டது.

கடந்த காலாண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவனத்திற்கு மேக் கம்ப்யூட்டர்களில் இருந்து மட்டும் ரூ. 54,453 கோடி வருவாய் கிடைத்தது. இதே காலக்கட்டத்தில் இன்டெல் பிசி பிரிவு ரூ. 76 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கம் முதலே தனது மேக் கம்ப்யூட்டர்களில் சொந்த சிப்செட்களை பயன்படுத்த திட்டமிட்டதாக 2018 ஆம் ஆண்டிலேயே தகவல்கள் வெளியாகின. 
Tags:    

Similar News