செய்திகள்
அண்ணாமலை

பா.ஜனதாவுக்கு எதிரான கட்டமைப்பினை உடைத்து தமிழகத்தில் வெற்றி பெறுவோம்- அண்ணாமலை

Published On 2021-11-24 07:16 GMT   |   Update On 2021-11-24 07:16 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை:

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு மாவட்டம் தோறும் புதிய அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான பணி பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. தற்போது வாணியம்பாடி, நெல்லை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 மாவட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

இந்த அலுவலகங்களை இன்று திருப்பூரில் வைத்து காணொலி காட்சி மூலம் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.

தமிழகத்தை பொருத்தவரை பா.ஜனதா கட்சி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. ஆனால் பா.ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற முடியாத அளவுக்கு திட்டம் போட்டு பொய்யான தகவல்கள் மூலம் ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளனர். அதற்கு பல்வேறு தளங்களையும் கையில் எடுத்துள்ளனர்.

ஆனால் அவற்றை நாங்கள் உடைத்து வருகிறோம். அதற்கு சாட்சி தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். அடுத்து வரும் தேர்தலிலும் இந்த எண்ணிக்கை உயரும். எங்களை பொருத்தவரை கட்சி வளர்ச்சி என்பது மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக குரல் கொடுத்ததன் மூலம் கட்சி வளரும் என நம்புகிறோம்.

உதாரணமாக முல்லை பெரியாறு, காவேரி பிரச்சினை உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். அதேநேரம் தி.மு.க. அரசு செய்யும் தவறுகளை எல்லாம் நாங்கள் சுட்டிக்காட்ட தவறுவதில்லை. மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதி கொடுத்து எல்லாவற்றையும் நிறைவேற்றியது போல அவர்களுடைய வழக்கமான பாணியில் மாய தோற்றத்தை உருவாக்கி வருகின்றார்கள்.

பெட்ரோல்-டீசல் விலையை குறைப்போம் என்று அவர்கள் தான் சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் சொல்லாத மத்திய அரசு குறைத்து இருக்கிறது. இதைத்தான் சுட்டிக்காட்டி தி.மு.க. அரசை எதிர்த்து போராடுகிறோம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. அதிக இடங்களை கைப்பற்றுவோம். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பல திட்டங்களை கொடுத்துள்ளது. பா.ஜனதாவுக்கு எம்.பி.க்கள் இல்லாவிட்டாலும் கூட 2 கவர்னர்கள், ஒரு மத்திய மந்திரி உள்பட பல பொறுப்புகளை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வரும் காலம் பா.ஜனதா காலமாக மாறும். அதற்காகவே உழைத்து வருகிறோம். இன்றைய செயற்குழு கூட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக பல திட்டங்கள் தீட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News