செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து

கொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து

Published On 2021-05-07 07:18 GMT   |   Update On 2021-05-07 07:18 GMT
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி விட்டு அதன்பின்னர் கோட்டைக்கு சென்று தனது பணிகளை தொடங்கினார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும்.

அதன்படி, தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்.



பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கோட்டைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார். முதல் பணியாக, 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இது 2 தவணைகளாக வழங்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாயை மே மாதத்திலேயே வழங்கும் உத்தரவில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் 16ம் தேதி முதல் குறைத்து விற்பனை செய்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார்.

சாதாரண கட்டண, நகர பேருந்துகளில் பெண்கள் நாளை முதல் இலவசமாக பயணம் மேற்கொள்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார்.

இதே போல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார். இதேபோல் புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண புதிய துறை தொடர்பான கோப்பிலும் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.




Tags:    

Similar News