செய்திகள்
பொன் ராதாகிருஷ்ணன்

தமிழை பயன்படுத்தி அரசியல் செய்பவர்களே நன்றி கெட்டவர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

Published On 2019-09-17 08:14 GMT   |   Update On 2019-09-17 08:14 GMT
ஒட்டுமொத்த தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என கூறவில்லை என்றும் தமிழை பயன்படுத்தி அரசியல் செய்பவர்களை மட்டுமே குறிப்பிட்டதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

நாகர்கோவில்:

தமிழக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என கூறியதாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு விளக்கம் அளித்து நாகர்கோவிலில் இன்று பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என நான் கூறியது, 8 கோடி தமிழர்களை அல்ல. தமிழ் என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் நடத்துகின்றவர்களை பற்றி தான் கூறினேன்.

அவர்கள் தமிழை அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதை வைத்தே பிழைப்பு நடத்துகிறார்கள்.

தமிழை வளர்ப்பவர்களை அரவணைக்கும் எண்ணம் இவர்களுக்கு இல்லை. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் உரையாற்றுகின்றபோது அதற்கு நன்றி சொல்லக்கூட யாரும் தயாராக இல்லை.

இதற்கு என்ன அர்த்தம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் காரணங்களால் தான் அவர்கள் பிரதமருக்கு நன்றி சொல்லவில்லை. இதில் இருந்து நான் கூறிய கருத்து ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான கருத்து அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது அரசியலை வைத்து வியாபாரம் செய்பவர்கள் பற்றி நான் கூறிய கருத்தாகும்.


நீண்ட காலத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். விமர்சனமும் செய்திருக்கிறார்.

அவர் உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்தை முழுமையாக படித்திருக்க வேண்டும். அவ்வாறு படித்திருந்தால் இது போன்ற விமர்சனங்கள் வந்திருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News