செய்திகள்
டிகே சிவக்குமார்

கர்நாடகத்தில் பாஜக அரசின் நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

Published On 2021-06-08 03:10 GMT   |   Update On 2021-06-08 03:10 GMT
மக்கள் உயிரை காக்க போராடும்போது, பா.ஜனதாவினர் அதிகாரத்திற்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. கொரோனா பரவலை தடுப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனக்கு கிடைத்துள்ள தகவலின்படி பாஜகவை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள், சில மடங்களுக்கு சென்று அங்குள்ள மடாதிபதிகளை சந்தித்து பேசியுள்ளனர். எந்தெந்த மந்திரிகள் வந்தனர் என்பது எனக்கு தெரியும். அந்த மடாதிபதிகள் அவர்களுக்கு அறிவுரை கூறட்டும்.

எடியூரப்பாவுக்கு ஆதரவாக 65 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து இட்டிருப்பதாக ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

அந்த எம்.எல்.ஏ.க்கள் யார்-யார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். அதன் பிறகு அதுபற்றி நான் கருத்து கூறுகிறேன். மக்களை காக்க வேண்டிய நேரத்தில்
பாஜக
வினர் அரசியல் செய்கிறார்கள்.

இவர்களுக்கு மக்களின் உயிர்களை விட பதவியே முக்கியம். கர்நாடகத்தில் பாஜக அரசின் நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது. பாஜக எம்.எல்.ஏ.க்கள் வீதியில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். மந்திரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. ஒருவர், தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார். இன்னொரு மந்திரி, அதுபற்றி தனக்கு தெரியாது என்று கூறுகிறார்.

அதிகாரிகள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். மக்கள் உயிரை காக்க போராடும்போது, பாஜகவினர் அதிகாரத்திற்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. கொரோனா பரவலை தடுப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News