ஆன்மிகம்
சர்வ அலங்காரத்தில் பெருமாள், தாயார் சேர்த்தி மண்டபத்தில் எழுந்தருளிய காட்சி.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை

Published On 2020-08-24 06:03 GMT   |   Update On 2020-08-24 06:03 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின் காரணமாக பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து நடை சாத்தப்பட்டு உள்ளது. அதேநேரம் கோவிலில் நித்தியப்படி கால பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது இல்லை.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பங்குனி தேர் திருவிழா (ஆதிபிரம்மா திருநாள்), சித்திரைத் தேர் திருவிழா (விருப்பன் திருவிழா), பெருமாள், தாயார் கோடை திருநாட்கள் மற்றும் பெருமாள், தாயார் வசந்த திருநாள் விழாக்கள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கான பரிகார ஹோமங்களான மஹா சாந்தி ஹோமம் மற்றும் சகஸ்ர கலசாபிஷேக பூஜை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மீண்டும் அங்குரார்ப்பணம் தொடங்கி விட்டுப்போன பிரம்மோற்சவங்கள் நடத்த வேண்டும் என்று ஆகமத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுபட்ட பங்குனி தேர் திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோவில் வளாகத்துக்குள் நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழாவையொட்டி நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷ வாகனம், கற்பகவிருட்சவாகனம், குதிரை வாகனங்களில் கருட மண்டபத்தில் எழுந்தருளினார்.

திருவிழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி காலை 8 மணிக்கு முன்மண்டபம் வந்து சேர்ந்தார்.

பின்னர் காலை 10.15 மணிமுதல் மதியம் 1 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. சேர்த்தி சேவைக்கு பின் நம்பெருமாள் கோரதத்தில் (தேரில்) எழுந்தருளுவது வழக்கம். ஆனால் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள் கோரதத்திற்கு பதிலாக இரவு 8 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரை சந்தனு மண்டபத்தில் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் பங்குனி தேர் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News