செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து 3-வது நாளாக 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

Published On 2021-11-21 04:37 GMT   |   Update On 2021-11-21 04:37 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 7 நாட்களாக 120.10 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:

வடகிழக்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

கடந்த 14-ந் தேதி முதல் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. 3-வது நாளாக அணையில் இருந்து இன்று விநாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கால்வாயில் 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 7 நாட்களாக 120.10 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது.

மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் 24 மணி நேரமும் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News