செய்திகள்
தொழிலாளர்கள் விபத்தில்லாமல் பணிகளை மேற்கொள்வதாக உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

உறுதிமொழி எடுத்த பின்னர் பணிக்கு செல்லும் பட்டாசு தொழிலாளர்கள்- விபத்துகள் குறைய வாய்ப்பு

Published On 2021-04-04 13:04 GMT   |   Update On 2021-04-04 13:04 GMT
சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் தற்போது தொழிலாளர்கள் தினமும் உறுதி மொழி எடுத்துக்கொண்ட பின்னர் பணிக்கு செல்வதால் விபத்துகள் குறைய வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிவகாசி:

சிவகாசி, சாத்தூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மார்ச் மாதம் விபத்து ஏற்பட்ட நிலையில் இந்த விபத்துக்களில் காயம் அடைந்த 30 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவங்களுக்கு பின்னர் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் இருப்பதும், தொழிலாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் சிவகாசியில் உள்ள மத்திய வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அரசு அதிகாரி சுந்தரேசன், பட்டாசு ஆலைகளில் உற்பத்தியின் போது போதிய பயிற்சி பெற்ற தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த கேட்டுக்கொண்டார்.

பணிக்கு வரும் தொழிலாளர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி அன்றைய தினம் விபத்து இல்லாமல் பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை எக்காரணத்தை கொண்டும் மீற கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் சிவகாசியில் உள்ள 60 சதவீதத்துக்கு மேல் உள்ள பட்டாசு ஆலைகளில் மத்திய அரசு அதிகாரி சுந்தரேசன் வலியுறுத்தல் காரணமாக விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொழிலாளர்கள் வந்து செல்லும் வாகனங்களில் கூட இந்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது பட்டாசு ஆலைகளில் பணிகள் தொடங்குவதற்கு முன்னர் தொழிலாளர்கள், போர்மென்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி விபத்து இல்லாமல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோம் என்ற உறுதிமொழியை எடுத்து வருகிறார்கள். மத்திய அரசு அதிகாரிகளின் வலியுறுத்தல் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த நடைமுறை தொடர்ந்தால் பட்டாசு ஆலைகளில் மனித தவறுகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News