இந்தியா
நிதின் கட்கரி

மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு 2-வது முறையாக கொரோனா

Published On 2022-01-13 01:54 GMT   |   Update On 2022-01-13 01:54 GMT
சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
புதுடெல்லி :

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசில் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் நிதின் கட்கரி (வயது 64).

பா.ஜ.க. மூத்த தலைவரான இவருக்கு கொரோனா தொற்றின் முதல் அலையின்போது கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதி கொரோனா உறுதியானது. அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று 15 நாளில் குணம் அடைந்தார்.

தற்போது இந்த 3-வது அலையில், அவருக்கு மறுபடியும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அவரே சமூக ஊடக பதிவுமூலம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், “ இன்று (நேற்று) எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. தேவையான எல்லா வழிகாட்டும் நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். வீட்டில் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

இதேபோன்று, பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், சமீபத்தில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, அதில் இருந்து வெளியே வந்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி உள்ள அமரிந்தர் சிங்குக்கும் (79) நேற்று கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது.

இவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இவருடைய மனைவியும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான பிரனீத் கவுருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலுக்கும் (74) நேற்று கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இவரது அலுவலக ஊழியர்கள் சிலருக்கு ஏற்கனவே கொரோனா உறுதியாகி தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News