வழிபாடு
பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர். வள்ளி, தெய்வானையுடன் குமரவிடங்கபெருமான் தேரில் எழுந்தருளிய காட்சி.

2 ஆண்டுக்கு பின் நடைபெற்ற திருச்செந்தூர் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-02-16 02:29 GMT   |   Update On 2022-02-17 11:27 GMT
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மாசித்திருவிழாவும் ஒன்று.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருவிழாவான இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 6.35மணிக்கு விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 7.15 மணிக்கு தேர் நிலையத்தை அடைந்தது.

தொடர்ந்து 7.25 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 8 ரதவீதிகளின் வழியாக சென்று நிலையை அடைந்தது.

அதனைத்தொடர்ந்து தெய்வானை அம்மாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

மாசித்திருவிழா தேரோட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

கடந்த 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக திருவிழாக்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தொற்று பரவல் வெகுவாக குறைந்ததை தொடர்ந்து திருவிழாவின் அனைத்து நாட்களும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் இன்றைய தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்ட திருவிழாவில் கோவில் இணை ஆணையர் குமரதுரை, திருச்செந்தூர் கோர்ட் நீதிபதி வஷீத் குமார், திருச்செந்தூர் சப்-கலெக்டர் கோகிலா, ஏ.எஸ்.பி.ஹர்சிங், தர்மபுர ஆதின திருநெல்வேலி கட்டளை திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமி, ஏரல் அருணாசல சுவாமி கோவில் தக்கார்அ.ரா.கா.அ.கருத்தப்பாண்டிய நாடார், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், திருச்செந்தூர் கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், சிவநேச ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், சிவ ஆதித்தன், சுகாதீப் ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், குமரேச ஆதித்தன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் வேலவன், இந்து மக்கள் கட்சி மாநில பொருளாளர் ரவிகிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள்சுடலை, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

11-ம் நாள் திருவிழாவான நாளை (17-ந் தேதி) மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றனர்.

அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளி வீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேருகிறார்கள்.

அங்கு இரவு அபிஷேகம், அலங்காரம் ஆகி சுவாமி-அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

நாளை மறுநாள் (18-ந் தேதி) மாலை சுவாமி அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வருகிறார்கள். இரவு சுவாமியும் அம்பாளும் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேருகிறார்கள்.
Tags:    

Similar News