செய்திகள்
போலீசார் போராட்டம்

வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து டெல்லியில் போலீசார் ‘திடீர்’ போராட்டம்

Published On 2019-11-05 09:02 GMT   |   Update On 2019-11-05 09:02 GMT
வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து டெல்லியில் போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு இன்று ஏராளமான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

டெல்லியின் தெற்கு பகுதியில் டிஸ்ஹசாரி கோர்ட்டு உள்ளது. கடந்த 2-ந்தேதி இங்கு வாகனம் நிறுத்தம் தொடர்பாக போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் கலவரமானது. இதில் 21 போலீசாரும், 8 வக்கீல்களும் காயம் அடைந்தனர். 14 மோட்டார் சைக்கிள்கள், போலீசாரின் கார் ஒன்றும் தீவைத்து எரிக்கப்பட்டன. ஒரு வேனும் சேதமானது.

இந்த நிலையில் வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து டெல்லியில் இன்று போலீசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

“எங்களுக்கு நீதி வேண்டும்“ என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போலீசார் கோ‌ஷமிட்டனர். போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வேண்டும், உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து விசாரிக்காதது ஏன்? அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போலீசார் போராட்டத்தில் குதித்தனர்.

போலீசாரின் இந்த திடீர் போராட்டம் அசாதாரமற்றது. உயர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரை சமாதானப்படுத்தினர். உத்தரவாதமும் அளித்தனர். போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டனர்.

இதற்கிடையே போலீசாரின் போராட்டம் தொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
Tags:    

Similar News