செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி மீண்டும் போடப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-06-23 09:41 GMT   |   Update On 2021-06-23 09:41 GMT
கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடாததால் நாங்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தடுப்பூசி போட்டு வருகிறோம்.

கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக குறைந்து வருகிறது. ஆனாலும் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா பரிசோதனையை சுகாதாரத் துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருவதால் முன்னெச்சரிக்கையாக பொதுமக்களுக்கு நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் கிணத்துக்கடவில் உள்ள அரசு மருத்து வமனையில் கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் மே மாதம் 17-ந் தேதி வரை மட்டுமே தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டது. அதன்படி கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் 737 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன் பின்னர் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி வராமல் இருப்பதால் ஒரு மாதத்திற்கு மேலாக கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படவில்லை.

கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி மருந்து வராததால் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 4- கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நல்லட்டிபாளையம், 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சொக்கனூர், 8-கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வடசித்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்று தடுப்பு ஊசி போட்டு வருகின்றனர்.

கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டும் இங்கு தடுப்பூசி போடாமல் இருப்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது. முதலில் சில நாட்கள் இங்கு தடுப்பூசி போடப்பட்டது. கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடாததால் நாங்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தடுப்பூசி போட்டு வருகிறோம்.

தடுப்பூசி போடும் பகுதியில் முன்கூட்டியே டோக்கன் வழங்குவதால், எங்களுக்கு டோக்கன் கிடைப்பதில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறோம். இதனை தடுக்க மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து கிணத்துக்கடவு பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் எளிதாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதியாக கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கும் தடுப்பு ஊசிகளை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News