செய்திகள்
திருப்பதி லட்டு

திருப்பதி கோவிலில் சலுகை விலை, இலவசமாக லட்டுகள் வழங்குவது ரத்து

Published On 2019-11-14 01:56 GMT   |   Update On 2019-11-14 01:56 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சலுகை விலை, இலவசமாக லட்டுகள் வழங்குவது ரத்து செய்யப்பட உள்ளது. கூடுதலாகத் தேவைப்படுவோருக்கு ஒரு லட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 80 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்கிறார்கள். அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக தினமும் 20 ஆயிரம் திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து வந்து கோவிலில் தரிசனம் செய்கிறார்கள்.

தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட் கார்டு’ மூலமாக தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். ரூ.300 டிக்கெட் தரிசனத்தில் தினமும் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் பக்தர்கள் வழிபடுகிறார்கள். இதுதவிர மாதத்தில் இரு முறை முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதில் இருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோரும் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

இலவச தரிசனம், டைம் ஸ்லாட் கார்டு மூலமாக தரிசனம் செய்வோருக்கு சலுகை விலையில் ரூ.20-க்கு 2 லட்டுகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் லட்டுகள் தேவைப்படுவோருக்கு ரூ.50-க்கு 2 லட்டுகள் வழங்கப்படுகின்றன. இரு மலைப்பாதைகளில் நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டும், சலுகை விலையில் ரூ.20-க்கு 2 லட்டுகளும், கூடுதல் லட்டுகள் தேவைப்படுவோருக்கு ரூ.50-க்கு 2 லட்டுகளும் வழங்கப்பட்டு வந்தன. அத்துடன் ரூ.300 டிக்கெட் தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக 2 லட்டுகள் வழங்கப்பட்டன.

ஒரு லட்டுவின் எடை 160 கிராமில் இருந்து 180 கிராமுக்குள் இருக்கும். ஒரு லட்டு தயார் செய்ய ரூ.40 செலவாகிறது. பக்தர்களுக்கு சலுகை விலையிலும், இலவசமாகவும் லட்டுகள் வழங்கப்படுவதால், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.241 கோடியே 20 லட்சம் ந‌‌ஷ்டம் ஏற்படுகிறது.

இந்த ந‌‌ஷ்டத்தை ஈடுகட்ட சலுகை விலையிலும், இலவசமாகவும் லட்டுகள் வழங்கும் நடைமுறை விரைவில் ரத்து செய்யப்பட உள்ளது. அதற்கு பதிலாக, அனைத்துத் தரிசன பக்தர்களுக்கும் தலா ஒரு லட்டு வீதம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒரு இலவச லட்டுவை தவிர, அதற்குமேல் கூடுதலாக லட்டுகள் தேவைப்படுவோருக்கு ஒரு லட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது, என திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News