செய்திகள்
தோவாளை மார்க்கெட் (கோப்பு படம்)

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

Published On 2020-10-18 10:06 GMT   |   Update On 2020-10-18 10:06 GMT
தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் மல்லிகை, கனகாம்பரம் பூக்கள் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆரல்வாய்மொழி:

நாகர்கோவில் அருகே தோவாளை பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தோவாளை மட்டுமல்லாமல் சுற்றியுள்ள ஊர்கள் மற்றும் நெல்லை, மதுரை, ஊட்டி ஆகிய வெளியூர்களில் இருந்தும், அண்டை மாநிலமான பெங்களூருவில் இருந்தும் பூக்கள் தினமும் லாரிகள் மூலம் வருகிறது.

தினமும் காலையில் பூக்களை வாங்க குமரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், கேரளாவில் இருந்தும் பூ வியாபாரிகள் வந்து, பூக்களை வாங்கி செல்வது வழக்கம். இதனால் காலையில் பூ மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.350-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.650 உயர்ந்து ரூ.1,000-க்கும், 600-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.1,000-க்கும் விற்கப்பட்டது.

பூக்கள் விலை உயர்வு குறித்து வியாபாரி கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘நவராத்திரி முதலாம் நாள் என்பதாலும், ஐப்பசி மாதப்பிறப்பு மற்றும் முகூர்த்தம் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. அதே சமயம் எதிர் பார்த்த அளவுக்கு வெளியூர்களில் இருந்து பூக்கள் வரவில்லை. அதனால் தான் இந்த அளவு பூக்கள் விலை உயர்ந்து உள்ளது‘ என்றார்.

மற்ற பூக்களின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு:-

அரளிப்பூ கழனி ரூ.80, பிச்சி ரூ.600, வாடாமல்லி ரூ.60, சிவப்பு கேந்தி ரூ.45, சம்பங்கி ரூ.300, முல்லை ரூ.600, ரோஜா (100 எண்ணம்) ரூ.30, பட்டன்ரோஸ் ரூ.150, துளசி ரூ.40, தாமரை (100 எண்ணம்) ரூ.700, பச்சை ரூ.7, கோழிப்பூ ரூ.60, கொழுந்து ரூ.100, மருக்கொழுந்து ரூ.150, மஞ்சள் கேந்தி ரூ.40, மஞ்சள் சிவந்தி ரூ.80, வெள்ளை சிவந்தி ரூ.170, ஸ்டெம்பு ரோஸ் ஒரு கட்டு ரூ.170 என விற்பனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News