செய்திகள்
யானைகள்

நீலகிரி, வால்பாறையில் கோவில், ரேசன் கடைகளை சூறையாடி அட்டகாசம் செய்த யானைகள்

Published On 2020-11-10 08:14 GMT   |   Update On 2020-11-10 08:14 GMT
நீலகிரி, வால்பாறையில் நூலகம் மற்றும் நடு நிலைப்பள்ளி கதவுகளை சூறையாடியது. குட்டியுடன் 9 காட்டுயானைகள் இந்த பகுதியில் சுற்றித்திரிவதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சி அலுவலக வளாகத்திற்குள் நேற்று இரவு புகுந்த 9 காட்டு யானை கூட்டம் அங்கிருந்த மின்சாதனப் பொருட்களை அடித்து நொறுக்கியது.

பின்னர் அருகில் உள்ள நூலகம் மற்றும் நடு நிலைப்பள்ளி கதவுகளை சூறையாடியது. குட்டியுடன் 9 காட்டுயானைகள் இந்த பகுதியில் சுற்றித்திரிவதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோன்று மசின குடிக்கு பயணிகளுடன் வந்த பஸ்சை வழிமறித்து தாக்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதேபோன்று வால்பாறை வனப்பகுதியில் இருந்து 20 யானைகள் தோனிமுடி எஸ்டேட்டுக்குள் புகுந்தன. அதில் இருந்த சில யானைகள் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பொருட்களை வைக்கும் அறையை நொறுக்கியது. இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டுயானை கூட்டத்தை விரட்டினர். ஆனால் யானைகள் கெஜமுடி மற்றும் தாய்முடி எஸ்டேட்டுகளுக்குள் நுழைந்தன. அங்கிருந்த மகளிர் சுயஉதவிக்குழு ரேசன் கடையை உடைத்து அங்கிருந்த ரேசன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்தது. பின்னர் வனப்பகுதிக்குள் யானை கூட்டம் செல்லாமல் குட்டியுடன் தாய்முடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் தேயிலை பறிக்க தொழிலாளர்களுக்கு வனத்துறை அனுமதி அளிக்கவில்லை.

பொதுமக்கள் தனியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை கூட்டம் பல்வேறு எஸ்டேட்டுகளுக்குள் புகுந்துள்ளன. ஒரு இடத்தில் விரட்டினால் வேறு எஸ்டேட்டுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டு வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் வனத்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினர். யானைகள் கூட்டம் கூட்டமாக எஸ்டேட்டுகளில் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News