ஆன்மிகம்
கருடாழ்வார்

சகல ஐஸ்வர்யங்களும் தரும் கருட பஞ்சமி

Published On 2021-08-12 04:41 GMT   |   Update On 2021-08-12 04:41 GMT
ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பஞ்சமியை ‘கருட பஞ்சமி’ என்று அழைப்பார்கள். இந்த நாளில் கருடாழ்வாரை தரிசனம் செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும்.
ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பஞ்சமியை ‘கருட பஞ்சமி’ என்று அழைப்பார்கள். இந்த நாளில் கருடாழ்வாரை தரிசனம் செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும். காசியப முனிவருக்கும் விநதைக்கும் பிறந்தவர் கருடன். கருடன் பிறந்தபோது, அவரது தாய் விநதை, தன்னுடைய சகோதரியான கத்ரு என்பவளிடம் அடிமையாக இருந்தாள்.

தன் தாயை விடுதலை செய்யும்படி கத்ருவிடம் கருடன் கேட்டார். அதற்கு அவள், “என்னுடைய பாம்பு குழந்தைகளுக்கு இந்திரனின் வசம் உள்ள அமிர்தத்தைக் கொண்டு வந்து கொடுத்தால், விநதையை விடுதலை செய்கிறேன்” என்று நிபந்தனை விதித்தாள்.

தாயைக் காப்பதற்காக தன்னுடைய பெரிய சிறகுகளை அடித்துக் கொண்டு இந்திரலோகம் சென்றார் கருடன். அவர் அமிர்தத்தை தேடி வந்திருப்பதை அறிந்த தேவர்கள், கருடனுடன் போரிட்டனர். ஆனால் கருடனை யாராலும் வெல்ல முடியவில்லை. இந்திரனும் கூட கருடனை வெற்றிகொள்ள முடியவில்லை. இருப்பினும் இந்திரன் கையில் இருந்த வஜ்ராயுதத்திற்கு மதிப்பளித்த கருடன் தன்னுடைய சிறகில் இருந்து ஒரு இறகை மட்டும் உதிர்த்து விட்டு அமிர்தத்துடன் பூலோகம் சென்றார்.

இப்படி பராக்கிரமம் புரிந்து தன்னுடைய தாயை அடிமைச் சங்கிலியில் இருந்து விடுவித்தவர், கருடன். அவர் மகாவிஷ்ணுவின் சேவையே தனது பாக்கியம் என்று கருதியவர். அதனால்தான் அவரை தன்னுடைய வாகனமாகவும், கொடியாகவும் மாற்றிக்கொண்டார் மகாவிஷ்ணு. பெருமாள் கோவில் கொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் கருடாழ்வாரை தரிசிக்க முடியும். கோவில் விழாக்களில், கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வதை ‘கருட சேவை’ என்பார்கள்.

திருமால் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடலில், நாராயணருக்கு அருகில் இருந்து எப்போதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்களை ‘நித்ய சூரிகள்’ என்று அழைப்பார்கள். அதில் முக்கியமானவர், கருடன். பறவைகளின் அரசன் என்று கருதப்படும் கருடாழ்வார், விஷக்கடிகளை தீர்க்கும் வல்லமை படைத்தவர்.
Tags:    

Similar News