ஆன்மிகம்
மாரம்மா அம்மன்

தடையை மீறி அதிகாலையில் கவுரசந்திரா மாரம்மா அம்மன் கோவிலில் பூஜை செய்த பக்தர்கள்

Published On 2020-08-26 09:05 GMT   |   Update On 2020-08-26 09:05 GMT
கவுரசந்திரா மாரம்மா அம்மன் கோவிலில் தடையை மீறி பக்தர்கள் பூஜை நடத்தியது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்ரதுர்கா மாவட்டம் சல்லகெரே தாலுகா கவுரசமுத்ரா கிராமத்தில் பிரசித்திபெற்ற கவுரசந்திரா மாரம்மா அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதத்தில் ஆண்டு திருவிழா கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழா கடந்த 24-ந் தேதி இன்று(புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெற இருந்தது.

இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான அம்மனின் தேரோட்டம் நேற்று நடைபெற இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அம்மனின் தேரோட்டத்தில் கர்நாடகத்தில் உள்ள பிற ஊர்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, மராட்டியம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இக்கோவிலில் நடைபெற இருந்த ஆண்டு திருவிழாவுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் கவிதா மன்னிகேரி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து போலீசாரின் கண்களில் இருந்து தப்பி சித்ரதுர்காவுக்கு வந்தனர். அவர்கள் நேற்று அதிகாலையில் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதற்கிடையே தடையை மீறி பக்தர்கள் அம்மன் கோவிலில் பூஜை நடத்தியது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்பேரில் இச்சம்பவம் குறித்து தலகு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
Tags:    

Similar News