செய்திகள்
புதிய இணையதளத்தை கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹு தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-10-21 08:51 GMT   |   Update On 2020-10-21 08:51 GMT
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று கண்காணிப்பு அதிகாரி கூறினார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ள புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். கண்காணிப்பு அதிகாரியும், இன்கோசர்வ் முதன்மை செயலாளருமான சுப்ரியா சாஹு, இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா குறித்த தகவல்கள் அடங்கிய www.nilgiriscovidcare.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. கொரோனா என்றால் என்ன?, அதன் அறிகுறிகள்?, எப்படி பரவுகிறது?, அதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள்? போன்ற அனைத்து விவரங்களும் உள்ளன. மேலும் கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி?, பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்வது எப்படி? என்பன போன்ற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கான இ-பாஸ் பெறும் லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற துறைகளின் கூட்டு முயற்சியால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரவீந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News