ஆன்மிகம்
சிவன் வழிபாடு

இன்று விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள்

Published On 2021-02-27 01:32 GMT   |   Update On 2021-02-27 01:32 GMT
இன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும்.
கும்பகோணத்தில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மாசி மக திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேசுவரர், காசி விசுவநாதர், காளகஸ்தீசுவரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேசுவரர், கவுதமேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதேபோல் சக்கரபாணி, ராஜகோபாலசாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய பெருமாள் கோவில்களிலும் மாசிமக திருவிழா நடைபெறுகிறது. இன்று(வெள்ளிக்கிழமை) மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளில்தான் உமா தேவியார் தச்சன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தச்சன் தனது மகளாக சிவபெருமானின் சக்தியாகிய உமா தேவியார் வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டி தவம் இருந்தார். அவனது தவத்தை கண்டு உள்ளம் குளிர்ந்த சிவன் அவன் முன்தோன்றி அவன் கேட்ட வரத்தை வழங்கினார்.

உமா தேவியாரும் தச்சனுக்கு மகளாகப் பிறந்தார். இறைவியே மகளாக பிறக்க அந்த குழந்தைக்கு தாட்சாயிணி என பெயரிட்டு வளர்த்து சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார் தச்சன்.

தோஷங்கள் நீங்கும்

மாசி மகம் நாளில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் கோவில்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும் மோட்சத்தையும் தருபவர்.

மாசிமக நாளை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்த நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். மாசி மகம் நாளில் கும்பகோணத்தில் தீர்த்தவாரி திருவிழா நடைபெறும்.

மாசி மகம் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாத மக நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுவது வழக்கம். இதுவே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோவில்களிலும், 5 பெருமாள் கோவில்களிலும் மாசி மக விழா கொண்டாடப்படும். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மாசிமக விழா கொண்டாடப்படுகிறது.

தீர்த்தவாரி

இன்று அதிகாலை 4 மணி முதல் மகா மககுளத்தில் பக்தர்கள் புனித நீராடத் தொடங்குவர். மதியம் 12.30 மணிக்கு ஆதிகும்பேசுவரர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் மகாமக குளக்கரையில் எழுந்தருள, தீர்த்தவாரி நடக்கிறது. இதேபோல பெருமாள் கோவில்களிலிருந்து உற்சவர் புறப்பாடும், காவிரி சக்கர படித்துறையில் தீர்த்தவாரியும் நடக்கிறது. மாசி மகம் விரதம் இருக்க விரும்புபவர்கள் காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, உலர்ந்த ஆடைகளை அணிந்து சிவசிந்தனையுடன் சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். ஒரு நேரம் மட்டும் சாப்பிடலாம். இரவு நேரத்தில் பால், பழம் சாப்பிடலாம். அன்று நாள் முழுவதும் சிவ சிந்தனையில் இருக்க வேண்டும்.
Tags:    

Similar News