செய்திகள்
கோப்பு படம்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 100 பேர் அனுமதி

Published On 2019-10-22 15:07 GMT   |   Update On 2019-10-22 15:07 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 பேர் அனு மதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு பாதித்த 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மதுரை:

மழைக்காலம் காரணமாக மதுரை மாவட்டத்தில் வைரஸ், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 125-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர்கள் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தவிர 100 பேருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ வனிதா கூறியதாவது:-

பருவநிலை மாறுபாடு காரணமாக மதுரை மாவட்டத்தில் காய்ச்சலின் தாக்கம் உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு தான்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்காக 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல டெங்கு காய்ச்சலுக்காக 12 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நோயாளிகளுக்கு டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வைரஸ், டெங்கு காய்ச்சலுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. நோயாளிகள் மட்டுமின்றி உறவினர்களுக்கும் நிலவேம்பு கசாயம் தரப்பட்டு வருகிறது.

இது தவிர அவர்களிடம் காய்ச்சல் பரவலை தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நோயாளிகள் முழுமையாக குணமான பிறகு, வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். எனவே யாரும் காய்ச்சல் தொடர்பாக பயப்பட தேவையில்லை என்றார்.

Tags:    

Similar News