செய்திகள்

பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது- உயர்நீதிமன்றம்

Published On 2019-03-27 08:18 GMT   |   Update On 2019-03-27 08:18 GMT
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக திறக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. #Sterlite #SterliteCase #MadrasHighCourt
சென்னை:

தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி உத்தரவிடும் அதிகாரம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இல்லை என்றும், இது குறித்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆலையை மூடியது சட்டவிரோதம் என்றும், ஆலைக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த 1-ம்தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறப்பதற்கோ, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கோ, எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. விசாரணை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பராமரிப்பு பணிக்காக ஆலையை அனுமதிக்கும்படி வேதாந்தா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இவ்வழக்கில் வைகோவை சேர்க்கக்கூடாது என்றும் வாதிடப்பட்டது.



ஆனால், வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்கும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தது. மேலும், ஆலையை மூடிய பின்னர் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் குடிநீரின் தரம் உயர்ந்துள்ளதா? என ஆய்வு செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #Sterlite #SterliteCase #MadrasHighCourt

Tags:    

Similar News