உள்ளூர் செய்திகள்
கைது

தென்காசி, அந்தியூரில் லட்சக்கணக்கில் பணம் கேட்டு 2 பேரை கடத்திய கும்பல்

Published On 2022-01-11 07:27 GMT   |   Update On 2022-01-11 07:27 GMT
தென்காசி, அந்தியூரில் லட்சக்கணக்கில் பணம் கேட்டு 2 பேரை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 53). இவர் பஞ்சுகாளிபட்டி பகுதியில் சாயப்பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரை கடந்த 7-ம் தேதி இரவு மர்ம நபர்கள் கடத்தி சென்று 15 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, ஸ்ரீராம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார், அங்கு சென்றனர்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியது. அவர்களை விரட்டி சென்ற போலீசார், 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த இம்ரான் (வயது 23), சேலம் மாவட்டம் மேச்சேரி புக்கம்பட்டி மோளகரட்டூரை சேர்ந்த வெங்கடேஷ் (38), ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (30), சத்தியமங்கலம் வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (30), சத்தியமங்கலம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அருண்குமார் (25) ஆகியோர் ஆவார்கள்.

இதில் தப்பி ஓடும்போது அங்குள்ள ஒரு பெரிய பள்ளத்தில் தவறி விழுந்து அருண்குமார் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயம் அடைந்தார். அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். பின்னர் கடத்தி வைத்திருந்த கோவிந்தராஜை போலீசார் பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

பிடிப்பட்ட 5 பேரிடமும் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது. இவர்கள் 5 பேர் மற்றும் தலைமறைவாக உள்ள ஜபருல்லா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர்கள் ஜெயிலில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக மாறி உள்ளனர். இதையடுத்து அவர்கள் கூட்டாக சேர்ந்து ஆட் கடத்தல் தொழில் செய்ய முடிவு செய்துள்ளனர். இதில் அருண்குமார் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார். மேலும் இவர் பிரபல ஆட்கடத்தல் ரவுடி மயிலாடுதுறையை சேர்ந்த நீடூர் விஜயனின் கூட்டாளியாகவும் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் தான் ஓமலூர் தொழில் அதிபர் கோவிந்தராஜிடம் பணம் நிறைய இருப்பதை அறிந்துள்ளான். இதையடுத்து அவரை கடத்தி பணம் பறிக்க அருண்குமாரும், அவனது கூட்டாளிகளும் முடிவு செய்துள்ளனர்.

கோவிந்தராஜ் வழக்கமாக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு சாய கம்பெனியில் பொருட்கள் கொள்முதல் செய்வார். இது பற்றி அங்கு வேலை செய்யும் வெங்கடேஷ், அருண்குமாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த 7-ம் தேதி இரவு மரக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற கோவிந்தராஜை அவர்கள் பின் தொடர்ந்து சென்று காரில் கடத்தினர் என தெரியவந்தது.

மேலும் இந்த கும்பல் தென்காசியில் ஒருவரை கடத்தி ரூ.20 லட்சமும், அந்தியூரை சேர்ந்த தனியார் மெட்ரிக்பள்ளி உரிமையாளர் முருகேசன் என்பவரை கடத்தி லட்சக்கணக்கில் பணம் கேட்டதும் அவர் தர முடியாது என கூறி கிணற்றில் குதித்ததால் விட்டு சென்றதும் தெரியவந்தது. இதுபோல் கர்நாடக மாநிலம் பெங்களூர், தருமபுரி தொப்பூர், சேலம் இளம்பிள்ளை உட்பட பல்வேறு இடங்களில் ஆட்களை கடத்த முயற்சிகள் செய்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பிடிப்பட்ட 5 பேரிடமும் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தர். இதையடுத்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து போலீசார் ஜெயிலில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜபருல்லாவை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News