ஆன்மிகம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது

Published On 2021-02-23 09:01 GMT   |   Update On 2021-02-23 09:01 GMT
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் உற்சவர் சந்திரசேகரர் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக உற்சவர் சந்திரசேகரர் மனோன்மணி தாயாருடன், அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க, மாடவீதிகளில் தேர் உலா வருகிறது.

தேரோட்டத்துக்கு வசதியாக சாலை சீரமைப்பு, மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. வருகிற 27-ந் தேதி கொடியிறக்கம், 28-ந் தேதி பந்தம் பறிஉற்சவம், 18 திருநடனத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
Tags:    

Similar News