செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பதவியேற்றபோது எடுத்த படம்.

சுப்ரீம் கோர்ட்டில் முதல்முறையாக 9 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்

Published On 2021-08-31 06:59 GMT   |   Update On 2021-08-31 08:35 GMT
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில்தான் புதிய நீதிபதிகளின் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம்.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளை தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குழு பரிந்துரை செய்யும். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்.

சுப்ரீம் கோர்ட்டுக்கு 9 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கடந்த 17-ந் தேதி கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. இந்த குழுவின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 பெண்கள் உள்பட 9 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்தார். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விக்ரம்நாத், சிக்கிம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஜிதேந்திரகுமார் மகேஸ்வரி, தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஹிமா கோலி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ், கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி பி.வி.நாகரத்னா, கேரளா ஐகோர்ட்டு நீதிபதி சி.டி.ரவிகுமார், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி பேலா எம்.திரிவேதி, மூத்த வக்கீல் பி.எஸ்.நரசிம்மா.


இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக 9 பேரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் முதல் முறையாக 9 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில்தான் புதிய நீதிபதிகளின் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். ஆனால் இந்த முறை சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள அரங்கில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியை சேர்த்து மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. தற்போது பதவி ஏற்றுள்ள 9 நீதிபதிகளை சேர்த்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்து உள்ளது. இன்னும் ஒரு இடம் காலியாக இருக்கிறது.


Tags:    

Similar News