செய்திகள்
ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தபோது எடுத்த படம்.

பணி செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம், ஊராட்சி பெண் தலைவர் புகார்

Published On 2021-01-12 10:11 GMT   |   Update On 2021-01-12 10:11 GMT
நிலக்கோட்டை அருகே உள்ள ஜம்புதுரைக்கோட்டையில் ஊராட்சி பணிகளை செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், ஊராட்சி பெண் தலைவர் புகார் கொடுத்தார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்காக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் தங்களின் மனுக்களை போட்டுச்சென்றனர். இந்த நிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி தலைவர் பவுன்தாய் மற்றும் உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஊராட்சி பணிகளை மேற்கொள்ளவிடாமல் ஊராட்சி தலைவரை சிலர் தடுக்கின்றனர். மேலும் அவரை அவதூறாகவும் பேசுகின்றனர். இதனால் ஊராட்சி வளர்ச்சி பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்க வந்துள்ளோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சி பெண் தலைவரை மட்டும் கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கும்படி போலீசார் தெரிவித்தனர். பின்னர் பவுன்தாய், கலெக்டரிடம் சென்று புகார் மனுவை கொடுத்தார்.

இதேபோல் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், புகார் பெட்டியில் ஒரு மனுவை போட்டுச்சென்றனர். அந்த மனுவில், பள்ளப்பட்டி கிராமம் செங்குளத்துக்கு அருகே அமைந்துள்ள சந்தன கருப்புசாமி கோவிலில் பூசாரியை மிரட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை சிலர் எடுத்துச்சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் புகார் பெட்டியில் போட்டுச்சென்ற மனுவில், பள்ளப்பட்டி ஊராட்சி 9-வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக சாலையில் குழி தோண்டப்பட்டது. ஆனால் 2 மாதங்கள் ஆகியும் அந்த குழி இன்னும் மூடப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டநீதி பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில், தொழில் வணிக துறையின் கீழ் இயங்கும் மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய தொழிற்கடன் பெறுவதற்கு கடிதம் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த கடிதத்தை கொண்டு வரும் யாருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்கப்படுவதில்லை. இந்த பிரச்சினைக்கு மாவட்ட கலெக்டர் உரிய தீர்வு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Tags:    

Similar News