செய்திகள்
கைது

போடியில் அரசு பஸ்களை உடைத்து சேதப்படுத்திய 10 பேர் கைது

Published On 2019-12-03 14:26 GMT   |   Update On 2019-12-03 14:26 GMT
போடியில் அரசு பஸ்களை உடைத்து சேதப்படுத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

தமிழ்புலிகள் அமைப்பின் தலைவராக உள்ள நாகை திருவள்ளுவன் கோவையில் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து போடி மேலசொக்கநாதபுரம் விலக்கு பகுதியிலும், சிலமரத்துப்பட்டி பகுதியிலும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் சிலர் அவ்வழியாக வந்த அரசு பஸ் கண்ணாடிகளை கல் வீசி தாக்கினர்.

இதில் மேலசொக்க நாதபுரம் விலக்கில் 2 அரசு பஸ்களும், சிலமரத்துப்பட்டியில் 3 அரசு பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்து சுக்குநூறானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதே சம்பவத்தை வலியுறுத்தி தேனி அன்னஞ்சி விலக்கு பகுதியில் தமிழ்புலிகள் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அரசு பஸ்களை கல்வீசி தாக்கிய 10 பேரை போடி டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வத்தலக்குண்டு அரசு டெப்போவில் இருந்து தினமும் அதிகாலை 4 மணிக்கு தாண்டிக்குடிக்கு பஸ் இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களுக்கும் பஸ்கள் செல்லும். ஆனால் இன்று 6 மணி வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மலைகிராமங்களுக்கு செல்ல வேண்டிய மக்கள் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். காலையில் பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்படலாம் என்பதால் தாமதமாக இயக்கப்பட்டது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News