செய்திகள்
உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண் கொலை- சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உ.பி. முதல்வர் உத்தரவு

Published On 2020-09-30 05:58 GMT   |   Update On 2020-09-30 05:58 GMT
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை 4 நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வெளியில் சொல்லிவிடுவார் எனக்கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் அந்த இளம்பெண்ணின் கழுத்து பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண், ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் உடல்நிலை மோசமடைந்ததால் அந்த இளம்பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக தூக்கிலிடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், ஹத்ரஸ் பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில உள்துறை செயலாளர் தலைமையில் 3 பேர் கொண்ட இந்த சிறப்பு விசாரணைக் குழு 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தன்னிடம் பேசிய பிரதமர் மோடி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப விட மாட்டோம் என்றும் உறுதி அளித்தார்.
Tags:    

Similar News