ஆன்மிகம்
பரசுராமன்

நீதியை நிலைநாட்டிய அவதாரம்

Published On 2019-12-19 04:57 GMT   |   Update On 2019-12-19 04:57 GMT
பத்து அவதாரங்களில் இதுவரை திருமால் எடுத்துள்ள அவதாரங்கள் ஒன்பது. இந்த ஒன்பதில், ஆறாவது அவதாரமே பரசுராம அவதாரம்.
“எப்பொழுதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மம் ஓங்குகிறதோ, அப்போதெல்லாம் மக்கள் என்னை காணக்கூடிய உருவத்துடன் நான் வெளிப்படுவேன். சாதுக்களை கடைத்தேற்றுவதற்காகவும், பாவச் செயல்களை செய்பவர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும், நான் யுகந்தோறும் வெளிப்பட்டுக் கொண்டிருப்பேன்” என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

வைணவ நெறியாக விளங்கும் பாஞ்சராத்ர ஆகமத்தில் அஹிர்புதத்ந்யை சம்ஹிதையில் திருமாலின் அவதாரங்கள் 39 என்று கூறப்பட்டுள்ளது. அதில் முதன்மையான பத்து அவதாரங்களே ‘தசாவதாரம்’ எனப்படுகிறது. பத்து அவதாரங்களில் இதுவரை திருமால் எடுத்துள்ள அவதாரங்கள் ஒன்பது. இந்த ஒன்பதில், ஆறாவது அவதாரமே பரசுராம அவதாரம்.

பிரம்மாவின் நேரடி வழித்தோன்றலும், சப்தரிஷிகளில் ஒருவருமான ஜமதக்கனி முனிவர் ரேணுகாதேவி இருவரும் சிவனை நோக்கி தவம் செய்தனர். அந்த தவத்தின் பயனாக அவர்களுக்கு நான்காவது மகனாகவும், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகவும் அவதரித்தவர் பரசுராமர். இவரது கதை ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ளது. சனாதானதர்மத்தில் கூறப்பட்டுள்ள ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவராவார்.

இளம் வயதில் ‘ராமபத்ரா' என்ற பெயருடன் வளர்ந்த இவருக்கு, ஆயுதங்களின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அதனால் தன் பிறப்பை அருளிய சிவனை தனது ஆன்மிக குருவாகக்கொண்டு கடும் தவம் புரிந்தார். அந்த தவத்தின் பயனாக சிவன் அவர் முன் தோன்றி ஒரு தெய்வீகமான கோடரியை வழங்கினார். அப்போது தேவர்களை துன் புறுத்திய முகலு என்ற அரக்கியை, ஈசன் அளித்த கோடரியை கொண்டு சம்ஹாரம் செய்தார். கோடரியை தாங்கியவர் என்பதால் ‘பரசுராமர்’ என்று அழைக்கப்பட்டார்.

பரசுராமரின் தாய் ரேணுகாதேவி, ‘கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது’ என்று போற்றி வணங்கும் கற்பரசி. அவா் தினமும் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று, அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவார். “நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும்” என்பார். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவாள். அந்தத் தண்ணீரைத்தான், அவரது கணவா் ஜமதக்னி முனிவர், தன்னுடைய பூஜைக்கு பயன்படுத்துவார்.

ஒரு நாள், நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி, தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை எடுத்தார். அப்போது நீரில் ஒரு தேவனின் அழகிய உருவம் நிழலாடுவதைக் கண்டார். அவனைப் பார்க்கும் ஆவலில் வானத்தைப் பார்த்தார். அந்த அளவில் அவரது கற்பு தவறியது. பின்னர் அவர் கையில் சேர்த்து பிசைத்த மண், குடமாக மாறவில்லை. தயக்கத்துடன் ஆசிரமம் வந்தடைந்தவரை கண்டதும், ஜமதக்னி முனிவருக்கு தெரிந்துவிட்டது. அவர் தன் ஞான திருஷ்டியில் அனைத்தையும் அறிந்திருந்தார்.

தன் மனைவி தடம் மாறவில்லை. ஆனால் மனம் தடுமாறிவிட்டாள் என்பதை அறிந்து, “கற்பில் தவறி விட்டாய் பெண்ணே” என்றார்.

பின்னர் தன் நான்கு மகன்களையும் வரச் செய்து, ரேணுகாதேவியின் தலையை வெட்டச் சொன்னார். முதல் மூன்று மகன்களும் தயங்கி நிற்க, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற வாக்குப்படி, தந்தை சொன்னது போலவே, தாயின் தலையை வெட்டினார்.

தன் சொற்படி நடந்த மகனைப் பார்த்த ஜமதக்னி முனிவர், “வேண்டிய வரம் கேள்” என்று பரசுராமரிடம் கூறினார். இதை தனக்கான வாய்ப்பாக எடுத்துக் கொண்ட பரசுராமர், “என் தாயை தாங்கள் உயிர் பிழைக்க வைக்க வேண்டும். மேலும் நடந்தது எதுவும், என் தாயின் நினைவில் இல்லாமல் நீக்கி அவரை குற்றமற்றவராக விளங்கச் செய்யவேண்டும்” என்ற வரங்களை அவர் கேட்டார். அப்படியே அருளினார் ஜமதக்னி முனிவர்.

ஒருசமயம் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்ற கார்த்தவீர்யார்ச்சுனன், ஆசிரமத்தில் இருந்த ஜமதக்னி முனிவரை சந்தித்தான். அரசனையும், அவனது படைகளை வரவேற்ற முனிவர், அவர்களுக்கு அறுசுவை விருந்து படைத்தார்.

‘காட்டில் வாழும் முனிவருக்கு இவ்வளவு பெரிய வசதி எப்படி?’ என்று நினைத்த கார்த்தவீர்யார்ச்சுனன், ஜமதக்னி முனிவர் வளர்த்த காமதேனு பசுதான் அனைத்துக்கும் காரணம் என்று அறிந்து, அதை கவர்ந்து சென்றான்.

இதுபற்றி ஜமதக்னி முனிவர், தனது மகன் பரசுராமரிடம் கூறினார். அவர் கோபத்துடன் சென்று கார்த்தவீர்யார்ச்சுனன் மற்றும் அவனது படைகளை அழித்து காமதேனுவை மீட்டு வந்து தந்தையிடம் ஒப்படைத்தார்.

அதைக் கேட்டு ஜமதக்னி முனிவர் வருந்தினார். “அரசன் என்பவன் தெய்வத்துக்குச் சமம். கார்த்தவீர்யார்ச்சுனன் செய்த தவறை மன்னிக்காமல், அவனைக் கொன்றது மகாபாவம். அந்த பாவம் நீங்க நீ திருத்தல யாத்திரை செல்ல வேண்டும்” என்றார்.

அதன்படியே ஒரு வருடம் தீர்த்த யாத்திரை சென்றார் பரசுராமர். அதற்கு கார்த்தவீா்யார்ச்சுனனின் புதல்வர்கள், ஆசிரமத்திற்குள் புகுந்து, ஜமதக்னி முனிவரை கொன்றுவிட்டனர்.

நடந்ததை அறிந்த பரசுராமர், “கொடிய குணம் கொண்ட சத்திரிய வம்சத்தை அடியோடு அழிப்பேன்'' என்று சபதம் செய்தார். அதன்படியே கார்த்தவீர்யார்ச்சுனனின் பிள்ளைகள் அனைவரையும் கொன்றார். சத்திரிய வம்சத்தின் 21 தலைமுறை அரசர்களை அழித்து பூமியில் சத்திரிய வம்சமே இல்லாமல் செய்வேன்” என்று சபதம் செய்து, அதன்படியேச் செய்தார். அப்படிச் செய்தும் அவரது கோபம் தணியவில்லை.

இதனால் பயந்த அரசர்கள் பலரும், இறுதியில் காசியப முனிவரை சரணடைந்தனர். அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, பரசுராமரிடம் “எனக்கு நீ ஒரு உபகாரம் செய்ய வேண்டும்” என்றார், காசியபர்.

“சொல்லுங்கள் செய்கிறேன்!” என்றார் பரசுராமர்.

“பல்வேறு மன்னர்களை வெற்றி கொண்டு நீ அடைந்த பூமியை எனக்கு தானம் தர வேண்டும்!” என்றார் காசியபர்.

மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்ட பரசுராமர், பூமியை காசியபருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். உடனே காசியபர், “பரசுராமா! இனி, இந்த பூமி எனக்குச் சொந்தமானது. நீ இங்கிருந்து அகன்று, சினம் தணிந்து சிவபூஜை செய்து உன் தவறுகளுக்கு பிராயசித்தம் தேடுவாயாக!” என்றார்.

அதன்படி அங்கிருந்து கிளம்பிய பரசுராமர் மேற்குக் கடற்கரை பகுதிக்குச் சென்றார். மன உளைச்சலுடன் கரையில் நின்று தனது மழுவாயுதத்தை சமுத்திரத்தை நோக்கி வீசியெறிந்தார். அதன் தாக்குதலுக்கு பயந்து சமுத்திர நீர் உள்வாங்கியது. அதனால் தென்பட்ட நிலப்பரப்பை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார். பரசுராமர் தன் கோடரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா. அதனால் கேரளா ‘பரசுராம ஷேத்திரம்’ என்றே அழைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்தபடியே சிவபெருமானை நோக்கி தவம் செய்யத் தொடங்கினார் என்று, சிவமகா புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

நெய்வாசல் நெடுஞ்செழியன்
Tags:    

Similar News