பொது மருத்துவம்
அரிசி உணவை தவிர்த்தால் உடல் எடை குறையுமா?

அரிசி உணவை தவிர்த்தால் உடல் எடை குறையுமா?

Published On 2022-02-02 03:16 GMT   |   Update On 2022-02-02 06:31 GMT
சரியான உணவு முறை, உடற்பயிற்சி, சீரான தூக்கம், நேர்மறையான மனநிலை போன்றவற்றின் மூலமே உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும்.
உடல் எடை குறைக்க வேண்டும் என முடிவு செய்ததும், முதற்காரியமாக பலரும் அரிசி உணவுகளை தவிர்ப்பார்கள். அவை எடையை அதிகரிக்கும் தன்மை கொண்டவை என்ற கருத்து பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. அரிசி உணவுகளை தவிர்ப்பதால் மட்டும் எடையை குறைக்க முடியாது. சரியான உணவு முறை, உடற்பயிற்சி, சீரான தூக்கம், நேர்மறையான மனநிலை போன்றவற்றின் மூலமே உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும். நமது தட்ப வெப்ப நிலையில் வளரும் உணவு வகைகளே உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றவை. அந்த வகையில் அரிசி உணவுகள் உடலுக்கு நன்மை அளிப்பவையாகும்.

நாம் வெள்ளை அரிசியை அதிகம் பயன்படுத்துகிறோம். 1 கப் வேக வைத்த வெள்ளை அரிசியில் 242 கலோரிகள், 4.4 கிராம் புரதம், 0.4 கிராம் கொழுப்புச்சத்து, 53.4 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 0.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. வைட்டமின் பி, கார்போ ஹைட்ரேட், போலேட், தயமின்  போன்ற சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

சமைப்பது எளிதாக இருக்கும் காரணத்தால் பலரும் அரிசியை குக்கரில் வேக வத்து சாப்பிடுகிறார்கள். அதை தவிர்த்து நம் முன்னோர்களை போல வடித்து சாப்பிடும் முறையை பின்பற்றலாம்.

இதன் மூலம் உடல் எடையை அதிகரிக்க செய்யும் மாவுச்சத்தை குறைக்க முடியும். அரிசி மாவை தோசையாக சுட்டு சாப்பிடுவதை விட ஆவியில் வேகவைத்து சாப்பிடும் இட்லி ஆரோக்கியமானது.

எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் வேக வைத்த அரிசி சாதம் ஒரு பங்கும், காய்கறி, கீரைகள், பருப்பு போன்றவற்றை சேர்த்து இரண்டு பங்கும் சாப்பிடலாம். வெள்ளை அரிசிக்கு பதிலாக சிகப்பரிசியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

உடல் எடையை அதிகரிப்பதற்கு காரணமான சோடியம், கொழுப்பு போன்றவை அரிசியில் மிகவும் குறைவான அளவே உள்ளன. பட்டை தீட்டப்படாத அரிசியில் உள்ள நார்ச்சத்து உடலில் சேரும் கெட்டக்கொழுப்பை கரைப்பதற்கு அவசியமானது. இவ்வாறு ஏராளமான நன்மைகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு அரிசி சிறந்த உணவாகும்.

Tags:    

Similar News