உள்ளூர் செய்திகள்
தக்காளி

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு

Published On 2021-12-27 07:59 GMT   |   Update On 2021-12-27 07:59 GMT
கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று 39 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. வரத்து குறைவு காரணமாக இன்று தக்காளியின் விலை மீண்டும் அதிகரித்து உள்ளது.
போரூர்:

ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் பெரும்பாலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து மூன்றில் ஒரு பங்காக குறைந்தது. இதனால் தக்காளியின் விலை கடந்த மாதம் பல மடங்கு அதிகரித்தது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ150 வரை விற்கப்பட்து.

இதை கட்டுப்படுத்தும் விதமாக மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி விலையும் படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.35க்கும் , சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.50க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று 39 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. வரத்து குறைவு காரணமாக இன்று தக்காளியின் விலை மீண்டும் அதிகரித்து உள்ளது.

இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கும், மார்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் கிலோ ரூ.80 வரையிலும் விற்கப்படுகிறது.

இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-

கடந்த வாரம் வரை ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்கள் என தினசரி 60க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வந்தது. இதனால் தக்காளி விலை கட்டுக்குள் வந்து விலையும் குறைந்தது.

இந்த நிலையில் வடமாநிலங்களிலும் தக்காளி விலை அதிகரித்துவிட்டதால் அங்கிருந்து தக்காளியை கொண்டு வர வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தக்காளி உற்பத்தி முழுவதுமாக சீரடையவில்லை.

இதன் காரணமாகவே சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் முதல் ரக தக்காளி ஒரு பெட்டி (14கிலோ) ரூ.480-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று 2 மடங்கு அதிகரித்து ஒரு பெட்டி தக்காளி ரூ.900-க்கு விற்கப்பட்டு வருகிறது.

இனி வரும் நாட்களில் தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News