செய்திகள்
கொலையுண்ட தொழில் அதிபர் அக்பர்

சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை: நகை-பணம் கொள்ளை?

Published On 2016-08-16 06:33 GMT   |   Update On 2016-08-16 09:11 GMT
சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் மண்ணடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை:

சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அக்பர் (54). தொழில் அதிபரான இவர் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். இன்று காலையில் நீண்ட நேரமாகியும் படுக்கையை விட்டு எழும்பவில்லை.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவர் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது கழுத்து அறுபட்ட நிலையில் அக்பர் படுக்கையில் பிணமாக கிடந்தார்.

அவரது கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. 2 இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன. படுக்கை முழுவதும் ரத்தமாக காட்சியளித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சல் போட்டனர். வடக்கு கடற்கரை போலீசார் விரைந்து சென்று அக்பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் இருந்தவர்களிடம் கொலை குறித்து விசாரணை நடத்தினர். வட சென்னை இணை கமி‌ஷனர் ஜோஷி நிர்மல்குமார் மற்றும் உதவி கமி‌ஷனர் ஜான் அருமைராஜ் ஆகியோரும் விரைந்து வந்தனர்.

தொழில் அதிபர் அக்பர் வசித்து வந்த வீடு 3 மாடிகளை கொண்டது. இதில் 3-வது மாடியில்தான் அவர் வசித்து வந்தார். வீட்டிலேயே படுக்கை அறையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது.

நேற்று இரவு மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. படுக்கையில் படிந்து இருந்த ரத்த கறையை போலீசார் சேகரித்தனர். கைரேகைகளையும் பதிவு செய்தனர். கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை.

அக்பரின் வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் யாரேனும் புகுந்து அவரை கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் வீட்டில் நகை-பணம் எதுவும் கொள்ளை போகவில்லை.

இதனால் தொடர்ந்து அக்பரை கொலை செய்து விட்டு தப்பியவர்கள் அவருக்கு தெரிந்த நபர்களாகவே இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

தொழில் அதிபர் அக்பரின் மனைவி பெயர் பாத்திமாமுத்து (49). இவர்களுக்கு முகைதீன்பாத்திமா (24) என்ற மகளும் ஷேக் முகமது (15) என்ற மகனும் உள்ளனர்.

முகைதீன் பாத்திமா லேசான மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அக்பர் மாலையில் நிறுவனத்தை பூட்டிவிட்டு சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துள்ளார்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து டி.வி.யில் சுதந்திர தின நிகழ்ச்சியை பார்த்து இருக்கிறார்கள். அதன் பின்னர் இரவு தூங்க சென் றனர்.

இவர்களது வீட்டில் 2 படுக்கை அறை உள்ளது. ஒரு அறையில் பாத்திமா முத்து, மகள்-மகனுடன் படுத்து இருந்தார். மற்றொரு அறையில் அக்பர் தூங்கினார். அதன் பின்னர்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையுண்ட அக்பருக்கும் அவரது மனைவி பாத்திமாவுக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. பெண் ஒருவருடன் அக்பருக்கு தொடர்பு இருப்பதாக அவர் சந்தேகப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அடிக்கடி கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இந்த பிரச்சினை இருவருக்கும் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுபோன்ற ஒரு சூழலில் தான் அக்பர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எனவே அக்பர் கொலையுண்டது தொடர்பாக அவரது மனைவி பாத்திமாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மகன் ஷேக் முகமதுவிடமும் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் கூறிய தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது.

இதனால் அக்பர் கொலையில் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களே ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இன்று மாலைக்குள் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்து விடுவோம் அக்பருக்கு தெரிந்த நபர்களே அவரை கொலை செய்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கொலை நடந்த மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெரு எப்போதும் பரபரப்பாகவே காட்சி அளிக்கும். நள்ளிரவு நேரத்திலும் ஆள் நடமாட்டம் இருக்கும். எனவே வெளியாட்கள் துணிச்சலாக வந்து 3-வது மாடிக்கு சென்று அக்பரை கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் வெளியில் இருந்து யாரும் வந்து அவரை கொலை செய்து விட்டு தப்பினார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

அக்பரின் வசித்து வந்த வீட்டின் கீழ் தளத்தில் வாசல் அருகில் கண்காணிப்பு கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதனையும் அக்கம் பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களையும் போட்டு பார்த்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதன் மூலம் கொலையாளிகள் யார் என்பது பற்றி விரைவில் துப்பு துலங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News