செய்திகள்
மழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்- 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Published On 2021-07-25 07:29 GMT   |   Update On 2021-07-25 07:29 GMT
விழிஞ்சம் கடற்கரை பகுதியில் இடைவிடாமல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

மலப்புரம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சேலையார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் பாலக்காடு மாவட்டத்தில் பெய்த மழையால் அந்த மாவட்டத்தில் பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொச்சி வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது. அதில் ஆலப்புழா, எர்ணாகுளம், பத்தனம்திட்டா, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்பட 14 மாவட்டங்களுக்கும் இன்று மிக பலத்த மழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் அடுத்த சில நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்பதால் கடல் மற்றும் ஆற்றோர பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடுக்கி மாவட்டம் உள்பட பல பகுதிகளில் மீட்பு படையினர் தயாராக இருக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் கடந்த 2018-2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் கடும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டதுபோல் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்து உள்ளது. அங்கு சில இடங்களில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் விழிஞ்சம் கடற்கரை பகுதியிலும் இடைவிடாமல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடலில் 11 கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News