செய்திகள்
ராமதாஸ்

கூட்டணி-இடஒதுக்கீடு விவகாரம்: டாக்டர் ராமதாசுடன் நாளை அமைச்சர்கள் குழு சந்திப்பு

Published On 2021-01-10 06:19 GMT   |   Update On 2021-01-10 06:19 GMT
கூட்டணி மற்றும் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாசை நாளை அமைச்சர்கள் குழு சந்தித்து பேசுகிறார்கள்.

சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகுதான் கூட்டணி தொகுதி பங்கீடுகள் பற்றி பேச முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கூறிவிட்டார்.

ஏற்கனவே கடந்த மாதம் அமைச்சர்கள் குழுவினர் திண்டிவனம் சென்று ராமதாசை சந்திக்க முயன்றனர். ஆனால் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு தீர்வு சொல்லுங்கள் அதன்பிறகு மற்ற விசயங்கள் பேசிக்கொள்ளலாம் என்று ராமதாஸ் கூறிவிட்டார். இதனால் அமைச்சர்கள் சந்திக்காமலேயே திரும்பினார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, தன்ராஜ் ஆகிய மூவர் குழு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். அப்போது ராமதாஸ் கூறிய நிபந்தனைகளை முதல்வரிடம் எடுத்து கூறி இருக்கிறார்கள். சுமார் ஒரு மணி நேரம் விவாதித்து இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பதிலை டாக்டர் ராமதாசிடம் தெரிவித்தனர். இரு தரப்பிலும் பேசப்பட்ட விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இந்த நிலையில் டாக்டர் ராமதாசை சந்திக்க அமைச்சர்கள் குழு நாளை செல்கிறது. அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமையில் தங்கமணி, வேலுமணி ஆகியோர் செல்கிறார்கள்.

தைலாபுரத்தில் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது இடஒதுக்கீடு வழங்குவதில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கூட்டணியில் தொகுதிபங்கீடு தொடர்பாகவும் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News