இந்தியா
யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டுடன் மிரட்டல் கடிதம்

Published On 2022-01-26 09:46 GMT   |   Update On 2022-01-26 09:46 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டுடன் வந்த மிரட்டல் கடிதம் கண்டு எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போபால்:

உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

குடியரசு தின விழாவையொட்டி பயங்கரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டுடன் மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் உள்ள பாலத்துக்கு கீழே டைமருடன் கூடிய வெடிகுண்டு ஒன்றை போலீசார் கண்டு எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அந்த வெடி குண்டை செயல் இழக்க வைத்தனர். வெடிகுண்டு இருந்த இடத்தில் ஒரு கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை மிரட்டும் வகையில் அந்த கடிதம் இருந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் ரேவா பகுதியில் நிகழ்வது இதுதான் முதல் முறையாகும். இதனால் இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் யார்? இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத்துக்கு வெடிகுண்டுடன் வந்த மிரட்டல் கடிதம் கண்டு எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News