செய்திகள்
மலைரெயிலில் பயணம் செய்வதற்காக நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்த போது எடுத்த படம்.

கேரளாவில் ஓணம் விடுமுறை - மலைரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2019-09-10 18:24 GMT   |   Update On 2019-09-10 18:24 GMT
கேரளாவில் ஓணம் விடுமுறையால் நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குன்னூர்:

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாளை (செவ்வாய்) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரள மாநிலத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு கேரளாவிலிருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கின்றனர். குறிப்பாக குன்னூர் பகுதியில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்கா, இயற்கை காட்சி முனைகளான லேம் ஸ்ராக், டால்பின் நோஸ் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.

நீலகிரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மலைரெயில் தற்போதும் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓணம் விடுமுறையால் ஊட்டிக்கு வந்துள்ள கேரள மாநில சுற்றுலா பயணிகள் குன்னூரில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரெயிலில் பயணம் செய்வதற்காக குன்னூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை முதலே குவிந்தனர்.

கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து பயணிகள் அனைவரும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டனர். பின்னர் போலீசார் பாதுகாப்புடன் அவர்களை மலைரெயிலில் ஏற்றினர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் சிலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் அடுத்த ரெயில் வரும்வரை அங்கேயே காத்திருந்து பயணம் செய்தனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளோம். இங்குள்ள மலை ரெயிலில் பயணம் செய்தபடி பசுமையான காடுகள், அழகிய பள்ளத்தாக்குகளை காண்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. கூட்டம் அதிகமாக உள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிக்க வேண்டியது உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News