செய்திகள்
சத்துணவு கூடத்தை யானைகள் இடித்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளதை படத்தில் காணலாம்.

சத்துணவு கூடத்தை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம்

Published On 2020-09-13 13:05 GMT   |   Update On 2020-09-13 13:05 GMT
வால்பாறையில், சத்துணவு கூடத்தை இடித்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.
வால்பாறை:

கேரள மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு திரும்பி வரும் யானைகள் வால்பாறை பகுதியில் பல்வேறு இடங்களில் அட்டகாசங்களில் ஈடுபட்டு வருகிறது. வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு எஸ்டேட் வழியாக முடீஸ், தாய்முடி எஸ்டேட் வழியாக நடுமலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு சேதங்களை ஏற்படுத்தி வந்த குட்டிகள் உள்பட 13 யானைகள் கொண்ட கூட்டம் பின்னர் அப்பர்பாரளை எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் வீடுகளை சேதப்படுத்தியது. இந்த யானைகள் கடந்த இரண்டு நாட்களாக பச்சை மலை எஸ்டேட் வனப்பகுதியில் முகாமிட்டு நின்று வந்தது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த யானைகள் கூட்டம் கருமலை எஸ்டேட் பாலாஜி கோவில் வனப்பகுதிக்கு சென்றது. அப்போது அங்கு உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி வளாகத்தில் புகுந்தது. அங்கு சத்துணவு கூடத்தின் சுவர் மற்றும் கதவு ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து அரிசி இருக்கிறதா என தேடி உள்ளது.

ஆனால் பள்ளி விடுமுறை காரணமாக உணவு பொருட்கள் ஏதும் இருப்பில் இல்லை. பின்னர் யானைகள் சத்துணவு கூடத்தில் இருந்த பாத்திரங்கள் முழுவதையும் உடைத்து வெளியே வீசியெறிந்தது.

இதையடுத்து சூடக்காடு சோலையில் முகாமிட்டு நின்றது.

இதுகுறித்த தகவலின்பேரில வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் மனித- வனவிலங்கு மோதல் தடுப்பு சிறப்பு படையினர் விரைந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் யானைகள் முகாமிட்டுள்ள சோலை பகுதி கருமலை எஸ்டேட் பாலாஜி கோவிலுக்கு அருகில் இருப்பதால் கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News