செய்திகள்
குஷ்பு

ராகுலை தலைவராகவே தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை- குஷ்பு கிண்டல்

Published On 2021-01-15 10:34 GMT   |   Update On 2021-01-15 10:34 GMT
ராகுல் காந்தி முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தது, தமிழ் பெருமை பற்றி பேசியதை பா.ஜனதாவைச் சேர்ந்த குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை:

ராகுல் காந்தி முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தது, தமிழ் பெருமை பற்றி பேசியதை பா.ஜனதாவைச் சேர்ந்த குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தி மதுரை வந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்த்து காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்பதை புரிந்து கொண்டதாகவும், தமிழும், தமிழரின் கலாசாரமும் நாட்டுக்கு தேவை என்றெல்லாம் பேசி இருக்கிறார். ஏன் இப்படி ஒரு திடீர் பாசம்?

ஜல்லிக்கட்டு போட்டி இன்று, நேற்று நடக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக நடத்தப்படுவது. காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தடை விதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிசேக்கிங்வி தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வாதாடினார்.

அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு எதிராகத்தானே இருந்தார்கள்.

தமிழர் பெருமை பற்றி தெரிந்து இருந்தால் அப்போதே நேரில் வந்து பார்த்து புரிந்து இருக்கலாமே. அப்போதெல்லாம் வராமல் இப்போது வந்தது ஏன்? இப்போதுதான் தூக்கம் கலைந்து இருக்கிறதா?

மோடியின் உண்மையான தமிழ் பற்றுதான் ராகுலை தூங்க விடாமல் துரத்தி இருக்கிறது. பிரதமர் மோடி ஐ.நா. சபை வரை எங்கு சென்றாலும் தமிழின் பெருமையை, சுட்டிக்காட்ட தவறுவதில்லை.

வெளிநாட்டு தலைவர்கள் வரும்போது ஆக்ரா தாஜ்மகாலை காட்டுவார்கள், நட்சத்திர ஓட்டலில் தங்குவார்கள். ஆனால் சீன அதிபரை அழைத்து மகாபலிபுரத்தை சுற்றிக்காட்டி தமிழர்களின் பெருமையை உலகிற்கு காட்டியவர். இந்திய இளைஞர்கள் அனைவரும் திருக்குறளை படிக்க வேண்டும் என்று எங்கு சென்றாலும் பேசுகிறார். அதுதான் உண்மையான பற்று.

ஆனால் இத்தனை ஆண்டு காலம் நாட்டை ஆண்டவர்கள், தமிழை கண்டு கொள்ளாதவர்கள் இப்போதுதான் அதன் பெருமையை புரிந்து கொண்டதாக கூறுகிறார்கள். இதை நினைத்து காங்கிரஸ்காரர்கள் தலைகுனிய வேண்டும்.

இதுவரை செய்த தவறுகளை மறைப்பதற்காக இப்போது தமிழக மக்கள் மத்தியில் நடிக்கிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் தெளிவாக பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

தமிழக மக்கள் மட்டுமல்ல கூட்டணி கட்சியான தி.மு.க. கூட ராகுலை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை.


காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக மதிக்கப்படும் ராகுல் மதுரைக்கு வருவதை அறிந்ததும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை. அந்த கட்சியின் பிரதிநிதியாக உதயநிதி ஸ்டாலினைத்தான் அனுப்பி இருக்கிறார். இதன் மூலம் ராகுலை அவர் ஒரு தலைவராகவே ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இவ்வாறு குஷ்பு கூறினார்.
Tags:    

Similar News