வழிபாடு
இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தபோது எடுத்த படம்.

இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-02-28 08:58 GMT   |   Update On 2022-02-28 08:58 GMT
இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் ஆகும். இந்த கோவிலின் தேர்திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. அன்று, ஆதிமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முறையே சிம்மம், யானை, ரிஷபம், அன்ன வாகனங்களில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 9.15 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து காலை 9.20 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகளுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதி வழியாக வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தைெயாட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி எடுத்தும் கோவிலை அடைந்து பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர்.

தேரோட்டத்தையொட்டி பல்வேறு அமைப்புகளின் சார்பாக ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை இனாம் சமயபுரம் ஊராட்சி தலைவர் மகாராணி தெய்வசிகாமணி மேற்பார்வையில், துணைத்தலைவர் அப்துல்லா மற்றும் வார்டு உறுப்பினர்கள் செய்திருந்தனர். சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News