ஆன்மிகம்
கோமத்தீஸ்வரருக்கு இளநீர், மஞ்சள், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்ட காட்சி.

கோமத்தீஸ்வரர் கோவிலில் மகா மஸ்தகாபிஷேகம்

Published On 2019-11-25 03:47 GMT   |   Update On 2019-11-25 03:47 GMT
மைசூருவில் அமைந்துள்ள கோமத்தீஸ்வரர் கோவிலில் மகா மஸ்தகாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோமத்தீஸ்வரரை வழிபட்டனர்.
மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பிளிகெரே கிராமத்தில் கோமட்டகிரி மலை மீது ஜெயின் சமுதாயத்தினர் சார்பில் கோமத்தீஸ்வரர் கோவில் அமைக்கப்பட்டது. அங்கு 30 அடி உயரத்தில் ஒரே கல்லில் கோமத்தீஸ்வரர் சிலை வடிக்கப்பட்டது. இந்த கோவிலைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட ஜெயின் சமுதாய முனிவர்களின் சமாதிகள் உள்ளன. மேலும் மலையின் கீழ் பகுதியில் ஜெயின் சமுதாயத்தினரின் ஆசிரமங்கள், தங்கும் விடுதிகள் அமைந்திருக்கின்றன.

பல ஆண்டுகளாக இந்த கோவிலில் வீற்றிருக்கும் கோமத்தீஸ்வரருக்கு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் ஏதும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இக்கோவிலில் மகா மஸ்தகாபிஷேக விழாவை கொண்டாட திட்டமிடப் பட்டது.

அதன்படி நேற்று கோவிலில் மகா மஸ்தகாபிஷேக விழா நடந்தது. அப்போது கோவிலில் வீற்றிருக்கும் கோமத்தீஸ்வரர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. முதலில் கோமத்தீஸ்வரர் சிலை புனித நீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. அதையடுத்து இளநீர் அபிஷேகம், தேன், எண்ணெய், நெய், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன்பின்னர் சந்தனம், மஞ்சம், குங்குமம், அஸ்வகந்தா மற்றும் திவ்ய, திரவிய பொருட்களுடன் 32 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. இதில் ஜெயின் சமுதாய குருக்களான தேவேந்திர கீர்த்தி பட்டாரக்க சுவாமிகள், சித்தாந்த கீர்த்தி பட்டாரக்க சுவாமிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோமத்தீஸ்வரரை வழிபட்டனர். அதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. 
Tags:    

Similar News