அழகுக் குறிப்புகள்
கூந்தல் உதிர்வு

கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கும் எளிய வழிகள்

Published On 2022-04-28 08:13 GMT   |   Update On 2022-04-28 08:13 GMT
தலைக்கு குளித்தவுடன் தலைமுடியை துவட்டுவதற்கு, கடினமான துண்டு பயன்படுத்தாமல், பருத்தியால் தயாரிக்கப்பட்ட பழைய டி-ஷர்ட்டுகளை உபயோகிக்கலாம்.
தலைமுடியில், நீளமானது, குட்டையானது, சுருட்டையானது என பலவிதம் இருந்தாலும், எல்லாவற்றிலும் பொதுவான பிரச்சினை முடி உதிர்வுதான். முடி கொட்டுவது இயல்பானது என்றாலும், உதிரும் முடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும், கொட்டிய இடத்தில் முடி வளராமல் இருப்பதும் கவலைக்குரியதாகும்.

முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதும், தலைமுடியை சரியாக பராமரிப்பதும், முடி உதிர்வை நிறுத்தி வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்கான சில எளிய வழிகளை இங்கே தெரிந்துகொள்வோம்.

பராமரிப்பு:

வறண்ட, மென்மை குறைந்த, சுருட்டை முடி கொண்டவர்கள்  தலைமுடியை வாரிவிடுவதற்கு சாதாரண சீப்பைப் பயன்படுத்தினால், முடி உதிர்வு அதிகமாக இருக்கும். ஆகையால் இவர்கள், பெரிய பற்கள் கொண்ட, மரத்தால் தயாரிக்கப்பட்ட சீப்பு பயன்படுத்துவதே சிறந்தது.

தலைக்கு குளித்தவுடன் தலைமுடியை துவட்டுவதற்கு, கடினமான துண்டு பயன்படுத்தாமல், பருத்தியால் தயாரிக்கப்பட்ட பழைய டி-ஷர்ட்டுகளை உபயோகிக்கலாம். ஹேர் ட்ரையர் பயன்படுத்தாமல், கூந்தலை மின்விசிறிக் காற்றிலேயே உலர விட வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.

தலையில் அதிகமாக எண்ணெய் பூசிக்கொண்டு வெளியே சென்றால், தூசி, புழுதி போன்றவை ஒட்டிக்கொண்டு பொடுகு உருவாகும். எனவே, எண்ணெய் தேய்த்த ஒரு மணி நேரத்திலேயே, அதை ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு முழுவதுமாக சுத்தப்படுத்த வேண்டும்.

அரிசி ஊற வைத்த தண்ணீரைத் தலையில் பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்துக் குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

முடி வளர்ச்சிக்கான பானம்:

இரண்டு நெல்லிக்காய்கள் மற்றும் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். இதை தினமும் தொடர்ந்து பருகி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

கறிவேப்பிலையை நிழலில் உலர வைத்து, பொடியாக்கி, சாதத்துடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், முடி உதிர்வு குறையும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் கூந்தல் எண்ணெய்:

நெல்லிக்காய்கள் - 3
கறிவேப்பிலை (உலர்ந்தது) - ஒரு கைப்பிடி
கரிசலாங்கண்ணி கீரை - ஒரு கைப்பிடி
செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட தேங்காய்
எண்ணெய் - ஒரு டம்ளர்
செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட
விளக்கெண்ணெய் - அரை டம்ளர்

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் இரும்புச் சட்டியில் போட்டு மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். கலவையில் இருந்து நுரை பொங்கி வந்ததும், அடுப்பை அணைத்து விடலாம். இதை இரும்புச் சட்டியிலேயே ஒரு நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும். பின்பு வடிகட்டி பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News